Showing posts with label மலைகள்.காம்.. Show all posts
Showing posts with label மலைகள்.காம்.. Show all posts

Tuesday, May 9, 2017

அத்தர் மணக்கும் பாலை

வெகு தொலைவு பயணித்து வருகின்றன
உதடுகள்

வறண்ட பாலையில்
முட்களினூடே நெழிதடம்
பதிக்கிறது சர்ப்பம்

செண்பகமரக் குரங்குகள்
மொட்டுக்களை தின்றுத் தாவுகின்றன

லாவகமாய் தோல்உரிக்கிறான்
முயல்கறிக்கு பழகியவன்

புழுதி படிந்த உதடுகள்
தணலில் புரண்டு
சிவக்கின்றன

பாதி வெந்த உதடுகளை
ஒத்தி எடுக்க
காத்திருக்கின்றன
அத்தர்  மணக்கும்
முத்தங்கள்

நினைவுகளை அழித்தல்


நினைவுகளின் தேன்கூட்டை  அழிக்க முடிவெடுத்தபின்
முதலில்
இதயத்தைச் சுற்றி
இறுக்கி மூடுங்கள்

ஓயாமல் ரீங்கரிக்கும்
சின்னஞ்சிறு நினைவுகளை
தீயிட்டுப் பொசுக்குகையில்
நொடிப் பொழுதும்
தயங்கித் தடுமாறாதீர்கள் 

தீயைத் தாண்டிவந்து நினைவுகள் கொட்டுகையில்
பற்கடித்து வலி பொருத்து
முன்னேறுங்கள்

ராணித் தேனீயை கொல்லுதல் என்பது
ஒரு வாழ்வின் குரல்வளையை அறுத்தலாகும்

இப்போது
கைநிறைய நெருப்பை
அள்ளி எடுங்கள்
மிக தீர்க்கமாக அதன்
தலைமேல் கொட்டுங்கள்

புகைப்படத்தை அழித்தல் போல் அல்ல
நினைவுகளை அழித்தல்

அனைத்தையும் எரித்து அழித்துத் திரும்புகையில்
புறங்கையில்
உடன் ஒட்டிவரும் மகரந்தம்
கவனித்தீர்களா?

இப்போது
தீயில்
ஒருமுறை
முங்கிக் கரையேறுங்கள்

பின் இதயத்தை இறுக்கி மூடுங்கள்

***

Sunday, October 2, 2016

கடலைக் களவாடுபவள்


கடலாடி மகிழும் மகள்
நம்ப மறுக்கிறாள்
கடலை 
உடன் எடுத்துச்செல்லுதல்
இயலாதென்பதை
தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்
குடிபுக முடியாதென்பதையும்
ஆமை ஓட்டிற்குள் மழைக்கு
ஒதுங்கமுடியாதென்பதயும்
பதறப் பதற
கிளிஞ்சல்களைப்
பொறுக்கத் தொடங்குபவள்
அரற்றிக்கொண்டு வருகிறாள்
வீடுவரை
உணவை மறுதலித்து
விழிகளை நிறைத்தபடி
உறங்கிப்போகுமவள்
விரலிடுக்கில் உறுத்தும்
மணலும்
உள்ளங்கைக்குள் புதையும்
கிளிஞ்சல்களும்
கடலுக்கு
வலைவீசிக்கொண்டிருக்கும்
நடுநிசிப் பொழுதில்
நடுங்கும் நட்சத்திரங்கள்
இமை தாழ்த்தி
உறைகின்றன
****
நன்றி: மலைகள். காம்

Thursday, June 18, 2015


ஜெயமோகனின் 'வெண் கடல்' சிறுகதை வாசித்தேன். ஒரு வைத்தியசாலையின் தினசரி காட்சியில் தொடங்கும் கதை சட்டென்று சரிவில் உருண்டோடும் சக்கரமென வேகம் கொள்கிறது. 'மரணித்த மழலை கைவிட்ட முலைகள்' என்று என்றோ நான் எழுதிய வரிகள் இன்று பெருவலியை சுமந்துகொண்டு என்னிடமே திரும்பி வந்திருக்கின்றன. பிறக்கும்போதே குழந்தை இறந்துபோகிற ஒரு தாயின் மார்பில் பால் கட்டிக்கொண்டு படும் வேதனையும், தீர்வுமே கதை.

வெண் கடல் எத்தனைப் பொருத்தமான பெயர்! ஆம், ஒரு தாயின் முலைகள் வெறும் சதையும், உதிரமும் அல்ல. அது பல நூறு ஜீவநதிகள் பாய்ந்தோடி ஒற்றைப் புள்ளியில் சங்கமிக்கும் பெருங்கடல். இரவெல்லாம், அழும் குழந்தையுடன் போராடுவாள் தாய். பகலில் பிள்ளை களைத்து உறங்கும். பட்டன் போடாத மேலாடையுடன் தாயும் உறங்கிப்போவாள். ஆனால் முலைகள் உறங்காது. பிள்ளைக்கு புகட்டுவது ஒன்றே இப்பிறவி நோக்கமென சதா இயங்கிக்கொண்டிருக்கும்.அவைகள் தனி மனுஷிகள்.

பிள்ளை பசிமறந்து உறங்குகிறது. தாய்க்கு, கிடைத்த நேரத்தில் உறங்கிக்கொள்ளும் ஆசை. பிள்ளையின் உணவு நேரத்தில் மிகச்சரியாக வெண் நதி வேகம் கொள்ளும். கரைபுரண்டோடி ஒற்றைப்புள்ளியில் மோதிக் கசியும். அது ஒரு மின்னல் வலி. தாய் பதறி எழுவாள். எழுப்பினாலும் எழாமல் உறங்குகிறது குழந்தை. காம்பை அதன் வாயில் பொருத்திப் பார்க்கின்றாள். அது ஒரு வேண்டுதல், கோரிக்கை. உன் சின்ன இதழ் பொருத்தி எனக்கு மோட்சம் கொடு என்னும் தவம். பிள்ளை மனமிரங்கவில்லை. அது ஆழ் சயனத்தில். வலி வேகமெடுக்கிறது. மின்னல் சாட்டையை சொடுக்கத்தொடங்குகிறாள் முலை என்னும் அந்த தனி மனுஷி. வார்த்தைகளுக்குள் பொருத்தமுடியாத ஆவேச வலி.

பெண், வலி தாங்கவென விதிக்கப்பட்டவள். கண்ணீர் கசிய முலைகளை பற்றியபடி பரிதவிக்கிறாள். நேரம் தாண்டிக் கொண்டிருக்கிறது. வெண் நதி குணம் மாறுகிறது. புளித்த பால் பின்பு இறுகத்தொடங்குகிறது. நூறாயிரம் தேள் முலைகளை உள்ளிருந்து கொட்டத் தொடங்குகிறது. பெண் கடந்துவரும் உச்சபட்ச வலியில் மேலும் ஒரு எண்ணிக்கை.
இப்போது என்ன செய்ய?! சுடு நீரில் ஒத்தடம் கொடுக்கிறாள். காம்புகளை மெல்ல நீவி பீய்ச்சத் தொடங்குகிறாள். வலியுடன் வெண் நதி சுரந்துவழிகிறது. இங்கு அவசரம் காட்ட முடியாது. மெல்ல மெல்ல வலி இறங்கி வருகிறது. அது ஒரு விடுபடல் , ஆசுவாசம். கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிற்றை மெல்ல மெல்ல தளர்த்தும் கணம். இன்னுமொரு எளிய வழி உண்டு. யாரேனும் காம்பை சப்பி உறிஞ்சி பாலை துப்பிவிடவேண்டும். இந்த உதவியை செய்யக் கடமைப்பட்டவன் கணவன். ஆனால் பல நேசமிகு ஆண்கள் கூட தயங்கும் இடம் இது தான்.
வெண் கடல் கதையிலும் அவ்வாறே. குழந்தையின் இதழ் பட்டு கண் திறக்க வழியில்லாதக் காம்புகள் அடைபட்டுக் கிடக்கின்றன. பால் புளித்து, இறுகி, பின் சலம் கட்டிப் போகிறது. வலியில் அலறித் தவிக்கிறாள் மனைவி. கணவன் நடுங்கி அழுகிறான். தன்னால் தான் இவளுக்கிந்த துன்பம் என்று மருகுகிறான். முலைகளை அரிந்து வீசியேனும் என் மனைவியை காப்பாற்றுங்கள் என்கிறான்.

'அபின்' மயக்கத்தில் இருக்குமவள் மயக்கம் தெளியும்போதேல்லாம் துடி துடிக்கிறாள் . எதிர்பட்டவர் தலைமயிரை பற்றி உலுக்குகிறாள். 'ஐயோ இந்த வலியை நானும் அறிவேன்.' அவள் வலி எழுத்துவழி என்னைத்தாக்குகிறது. என் முலைகளில் வலி பரவுகிறது. நானும் அவளுடன் துடிக்கின்றேன். வைத்தியர், கொளவட்டைகளை சேகரித்துவர கணவனையும், பணியாளையும் அனுப்புகிறார். வலி நீக்கும் வழி எனக்குத் தெரிந்துவிட்டது. அவ்விருவரும் மாடுகளை அட்டைகள் மொய்க்கும் குளத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாடுகளை நீரில் இறக்குகிறார்கள். பேசிக்கொண்டே மாடுகளின் அடிவயிற்றில் ஒட்டியிருக்கும் அட்டைகளை எடுத்து பாத்திரத்தில் சேகரிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் சேகரிப்பு. எனக்கு வலி தாளவில்லை. உனக்கு புரியவில்லையா ?எதற்கு இத்தனை நிதானமாக  கதையை நகர்த்துகின்றாய் ?! நீ ஆண் என்பதாலா ? மெல்ல நகரும் இக்காட்சிகளை நான் வெறுக்கிறேன்.  குளத்தின் வர்ணனையும், குளக்கரை தெய்வமும் யாருக்குவேண்டும்? ஆத்திரத்துடன் கதாசிரியரின் தலைமயிரை பற்றி உலுக்குகிறேன். அவசரம் அவசரம். விரட்டு இவர்களை. வலியுடன் நான் வைத்திய சாலைக்கும் குளத்திற்குமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அட்டைகள் துண்டில் வைத்து மார்பில் கட்டப்படுகிறது. அட்டைகள் பால்,உதிரம், சலம் என பாகுபாடின்றி உறிஞ்சுகின்றன. பிள்ளையற்றவளுக்கு ஒரு நூறு பிள்ளைகள். அவள் சத்தம் அடங்குகிறது. வலி குறைகிறது. கழுத்தை நெரித்த முடிச்சு மெல்ல விலகுகிறது. அயர்ந்து கண் மூடுகிறாள். பிரளயமே எழுந்து அடங்கிய அமைதி. வைத்தியர் அட்டைகளை அள்ளிச்சென்று  கோழிக்கு போடுமாறு சொல்கிறார். கண்மூடிக்கிடந்தவள் பதறி எழுகிறாள். 'கொல்லவேண்டாம் அய்யனே, என் பாலு குடிச்ச ஜீவன்கள் அவை ' என்கிறாள். அட்டைகள் குளத்தில் மீண்டும் விடப்படுகின்றன.

இக்கதையில் ஒரு வரி இருக்கிறது 
"ஸ்திரீ ஜென்மத்துக்குண்டான வலியிலே பாதி கூட ஆம்பிளைக்கு இல்லை..."

***
மலைகள்.காம் .

Monday, June 23, 2014

இந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை.





 மஞ்சள் வெயில் ' ஒரு தலைக் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகரமுடியாத நாவல். அது கதிரவன் என்ற ஒருவனின் கை அளவு காதல் அல்ல. அது ஒரு கடல், ஒரு வானம். இப்பிரபஞ்சம் முழுவதையும் நிறைத்துக்கொண்டு பாடும் பாடல். காணும் உயிரை எல்லாம் வாரிச்சுருட்டித் தன்னுள் கரைத்துவிடும் சுழல்.

கதிரவன் அதிகம் பேசாதவன். தனிமையின் மௌனத்திற்குள் தன்னைச் சுருட்டிக்கொள்பவன். இலக்குகள் அற்றவன். வாழ்வை அதன் போக்கில் நகர அனுமதித்திருப்பவன். இப்படியானவர்கள் பற்றுகொடி அற்று தள்ளாடிக்கொண்டிருப்பவர்கள். கலைஞன் சின்னதொரு பாராட்டுக்கு ஏங்கிக்கொண்டிருப்பவன். அவனுக்குத் தேவை பரிசுப்பொருள் அல்ல. ஒரு சொல், ஒரு கவனிப்பு, ஒரு புருவம் உயர்த்தல், ஒரு கைதட்டல் அவ்வளவே. கதிரவனும் அப்படியே. அவனின் கலைக்கு கிடைக்கும் பாராட்டு அவனை சந்தோசம் கொள்ளச் செய்கிறது. 

ஆண் எப்போதும் தன்னைப் பெண்ணிடம் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் ஒரு தாய் தேவையாய் இருக்கிறாள். அந்த தாயை அக்காவிடம், தங்கையிடம், தோழியிடம் என்று எங்காவது கண்டுவிடத் தவிக்கிறான். நான்கு நாள் நன்றாகப் பேசிவிட்ட ஒருபெண்ணைத் தனக்கானவள் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுவதும் அதனால் தான். கதிரவனும் அப்படியே. முன் பின் அறிந்திடாத ஒரு பெண் தனது ஓவியங்கள், கவிதைகளை ரசிக்கிறாள் என்று கேள்விப்பட்ட கணம் முதல் தவிக்கத்தொடங்கிவிடுகிறான். தள்ளாடும் கொடிபோன்ற அவன் மனம் அந்தப் பெண்ணைப் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.

ஜீவிதா என்ற அந்தப் பெண்ணை முதன் முதலில் சந்திக்கப்போகும் நாள், அப்பப்பா என்ன ஒரு தவிப்பு!! இரவெல்லாம் உண்ணாமல், உறங்காமல்,  நாளை ஜீவிதாவைக் காணப்போகும்போது போட்டுக்கொள்ள சட்டையைத் தேர்ந்தெடுத்து, அதை நள்ளிரவில் துவைத்து உலர்த்தி... ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ரகசியமாய் ஊடாடியபடியே இருக்கும் மின்னலையின் அதிர்வுகள் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாதவை .

இவ்வளவு முன்தயாரிப்புகளோடு அலுவலகம் சென்று, அவள் அவனைக் காண அறைக்கு வந்து, முதுகுக்குப் பின்னே காத்திருக்கிறாள் என்று உணர்ந்தும் திரும்பி அவளிடம் பேச துணிவற்றுத் தடுமாறும் நிமிடங்கள் அவ்வளவு அற்புதம்,  மிகத் தீர்க்கமாக. “அற்புதம்” என்ற சொல் இங்கு மிகை அல்ல .

கதிரவன் தனது மனதை ஜீவிதாவிடம் திறந்துகாட்டத் துணிவற்றவானாகவே இருக்கிறான். சின்னச் சின்ன வார்த்தைகள், மோதி நகரும் பார்வைகள், அவளைக் கால்கடுக்க காத்திருந்துக் காணும் நிமிடங்கள், பூக்காரி மூலம் அவன் தினம் தரும் பூக்கள் இவைகளே போதுமானதாக இருக்கிறது கதிரவனின் காதல் விதை வேர் பிடித்துக் கிளைபரப்ப.

ஆசை எனும் பச்சைக்கிளி கதிரவனின் மனச்சிறையில் கிடந்து ஓயாமல் கத்துகிறது, வேகம் கொண்டு மனக்கதவைக் கீறித்தவிக்கிறது, றெக்கைகளை அடித்து அடித்து ஓய்கிறது. தாளமுடியாத அவனது காதல் பாரத்தை மதுக்கடைகளும், கடல் அலைகளுமே தாங்கிக்கொள்கின்றன. 

நாடோடி உருதுப்பாடகன் 'கான் முகமது ' ஒரு கைவிடப்பட்டவன்.அல்லது இவ்வுலகை ஏதோ ஒரு தருணத்தில் கைவிட்டவன். அழுக்கன், கிறுக்கன். எப்போதும் தன்னை விட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னி விளக்கும், முகம் பார்க்கும் கண்ணாடியுமே அவன் துணை. மனதை உலுக்கும் பாடல்களில் தனது உலகை ஸ்ருஷ்டித்துக்கொண்டவன். அவனும் கதிரவனும் வேறு வேறா என்ன? பசித்த வயிற்றோடு தனது சிம்னி விளக்கை ஒரு தவம் போல அதீதக் கவனத்தோடு ஒரு மணிநேரமாகத் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் அவனே தான் கதிரவனும். தனது பசி, தூக்கம் அனைத்தும் மறந்து தனது காதலை ரசித்து ரசித்து வரைந்துகொண்டிருக்கிறான் கதிரவன். ஒரு கட்டத்தில் ஜீவிதா ஒரு புள்ளியாக மறைந்து, இப்பிரபஞ்சம் முழுதும் கதிரவனின் காதல் மட்டுமே ஒருஒளிக்கோளமாக மஞ்சள் வண்ணம் தளும்ப பொன்னாக ஜொலிக்கத்தொடங்குகிறது. 

தனது இறந்த மகள் நஜ்மாவைத் தேடி அலையும் சுலைமான் சேட், பச்சை வர்ணக் கதவை ஏதோ தாவரம் என்றெண்ணி மொய்க்கும் ஊசித்தட்டான்கள் என குறியீடுகள் இக்கதை நெடுகிலும் ஊடாடுகின்றன. எளிய மனிதர்கள் மேல் இந்நகரம் குப்பைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதனூடே வாழப்பழகிவிட்ட மனிதர்கள் அரிதாய் நல்லவைகளைப் பொறுக்கி எடுக்கின்றனர். உள்ளங்கைகளில் வரையப்பட்ட ஓவியமென அவைகளைப் பெற்றுக்கொண்டு குழந்தையாய் மகிழ்ந்து ஓடுகின்றனர்.

கதிரவனின் அறைக்குச் செல்லும் மரத்தாலான மாடிப்படி ஒருஅருமையான சித்தரிப்பு. ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் பிள்ளையைக் கடிந்தபடி  லேசாகத் தலையில் கொட்டி, அப்பாவுக்குத் தெரியாமல் பூனை நடை நடந்து உள்ளே அழைத்துச்சென்று சோறு போடும் தாயைப்போலக் கிசுகிசுக்கிறது சில வேளை. மகிழ் தருணங்களில் பிள்ளைகளோடு ஓடிப்பிடித்து விளையாடும் தாயாகி சப்திக்கிறது சிலவேளை. கதிரவனின் மனவோட்டத்துக்குத் தக்கபடி இசைகிறது அம்மரப்படி.

சப் எடிட்டர் சந்திரன், இரவுக்காவலாளி பாலகிருஷ்ணன், நண்பன் டேனியல் என்று கதிரவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் அவன் மேல் அன்பு செலுத்துபவர்களாக, நலம் விரும்பிகளாகவே இருக்கின்றனர். ஆனாலும் அவன் எப்போதும் தனிமையில் இருக்கிறான், துன்பத்தில் உழல்கிறான். காதல் அவன் நடுமனதில் சம்மணமிட்டு அமர்ந்து அவனைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் தன் அறைக்கதவைத் திறந்தே வைக்கும் கதிரவன் தன் உள்ளத்தை மட்டும் இறுகப்பூட்டி வைக்கிறான்.

இறுதியில் காதல் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்தபின்னும் தனது காதலை கைவிடாமல் சுமக்கிறான். தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனின் குழந்தையைக் கண்ணுக்குள் வைத்துக்காப்பாற்றும் தாயைப்போல ஜீவிதா எங்கோ இருக்க அவள் மேல் கொண்ட காதலைப் பேணிப்பாதுகாக்கிறான். கொண்டாடுகிறான்.

இந்தக் கதைக்கு மஞ்சள் வெயில் என்ற தலைப்பு தான் எத்துனைப் பொருத்தமானது?!!  
ஆம்.. அந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. கொஞ்சமும் சுணக்கம் இன்றி அதுஎல்லா உயிர்களிடத்தும் ஒன்றுபோலப் பொழிந்து பரவுகிறது. குப்பை மேட்டிலும், கோபுரக் கலசத்திலும் தனது மஞ்சள் நிற வெயிலை நீக்கமற நிறைத்துச்செல்கிறது. 
காதலும் அவ்வாறே ! 
கல் எறிபவனுக்கும், கரம் பற்றுகிறவனுக்கும் நேசத்தையே பரிசாகத்தருகிறது. 


குறிப்பு:

தளும்பிக்கொண்டிருக்கும் காதலை கணநேரமும் தனியே தவிக்கவிட முடியாது என்பது போல் யூமா வாசுகியின் “ மஞ்சள் வெயில் ” புத்தகத்தைச் சுமந்துகொண்டே அலைந்தேன். அதனோடு உண்டு, அதனோடு உறங்கி அக்காதல் பிரபஞ்சத்தை ஒரு முறை வலம்வந்து விட்டேன். எழுத்து நமக்குள் நடத்தும் மாயத்தை எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. நேசக்கரம் நோக்கி கயிரறுத்த கன்றுக்குட்டியாய் மனம் துள்ளிக்கொண்டு ஓடுவதை உணரும் தருணம் அற்புதம், அற்புதம், அற்புதம்.  
                       *****
செ.சுஜாதா.
நன்றி : மலைகள்.காம்    

Thursday, May 8, 2014

தேவஸ்வரம்






அவள் வெகு தொலைவு கடந்து வந்திருக்கிறாள். விரட்டப்பட்ட 

ஒரு அநாதை நாய்க்குட்டியைபோல திசைகள் அற்று 

ஓடிக்கொண்டிருக்கிறாள். கால்களில் வழிந்தபடி 

இருக்கும் உதிரம் முட்களின் இரக்கமற்ற கூர்மையை 

எழுதிக்காட்டுகிறது.இந்த கான்க்ரீட் உலகத்தின் விரைத்த, நிலைத்த 

விழிகள் அவளை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவள் ஓடுகிறாள். 

உருகும் தார் வாசனைக்கு அஞ்சி, பச்சையம் தேடி ஓடுகிறாள்.



அவளின்  மெலிந்த  கால்கள்  ஓர்  அடர்ந்த வனத்தின் வாசலில் 

அவளை கொண்டுவந்து சேர்த்திருந்தது. பாதைகள் அறியா 

அவ்வடர்ந்த வனத்தில் ஒரு பூனையின் தயக்கத்துடன் அவள் 

தனக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தாள். தடங்களைத் தேடி பாதங்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்ததொரு உச்சிப்பொழுதில்தான் அவள் அவனைக் கண்டாள். தடித்த பலா மரத்தின் வேர்களில் அமர்ந்து அவன் பலாச்சுளையைப் புசித்துக்கொண்டிருந்தான். கனிந்த பலாச்சுளையின் சாறு இதழோரம் வடிந்து அவன் மார்பில் சொட்டிக்கொண்டிருந்தது. புடைத்து திரண்ட ஒரு மரத்தில் கோடாரியால் உண்டாக்கிய ஒரு சிறு பிளவிலிருந்து பொன்னிறக்கோந்து வடிவதுபோல் அது மிக மெதுவாய் வடிந்துகொண்டிருந்தது.



ஏற்கனவே அவன் அருகில் அமர்ந்துவிட்ட அவள் மனம் அவளை அருகில் வரச்சொல்லி கை அசைக்கவும் அவள் மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள். நிமிர்ந்து நோக்கிய விழிகளில் “ தெறிக்கும் இரு சூரியன்கள்”.

அவன் சொன்னான் , “ வழிதவறிய காட்டு மானின் மருண்ட விழிகள் உனது” என்று.



ஒரு மேய்ச்சல் சிறுவனின் உடல்மொழியோடு அவன் அந்த வனத்துடன் உறவாடிக்கொண்டிருந்தான். வனத்தின் வாசல்வரை அவளுக்கு வழித்துணையாக வருவதாக அவன் சொன்னான். அவள் பயணம் அங்கே முடிந்துவிட்டதாக அவள் பதில் அளித்தாள். அவன் அவள் கண்களைப் படிக்க முயல்கையில் விழி வாசல், அவள் கடந்து வந்த பாதை முழுவதையும் திறந்து காட்டியது. அவள், அவன் நிழலில் இளைப்பாறும் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.



அவன் கரம் அவளை நோக்கி நீண்டது. அவள் அதைப்பற்றிக்கொண்டாள்.

ஆணிவேரின் ஈரமும், வாசனையும் அதில் இருந்தது. மரங்களினூடே ஒரு தும்பியின் லாவகத்துடன் அவன் பறந்துகொண்டிருந்தான். அவளையும் அவன் சிறகுகளில் ஏற்றி இருந்தான்.



அவர்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு சிற்றாற்றின் கரை. அவன் அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடி புன்னகைத்தான். பின் மண்டியிட்டு அமர்ந்து மணலை கைகளால் தோண்டத்தொடங்கினான். அறியும் ஆவலோடு அவளும் அவனோடு சேர்ந்து மண்ணை வாரி வெளியில் போட்டுக்கொண்டிருந்தாள். கசியத்தொடங்கியிருந்த ஈரம் அவர்கள் இருவர் கைகளையும் நனைக்கவும் “ ஹே “ என்று சின்னதாய் ஒலி எழுப்பியபடி அவன் வேகம் கூட்டினான். அப்போது அவர்கள் கைகளுக்குப் பாசி படர்ந்த வெண்ணிற மணிகளை ஒத்தச் சொற்கள் தட்டுப்படத்தொடங்கின. அவன் சொன்னான், ”'நான் தினமும் இங்கு வருவேன்,எண்ணிலடங்கா எனது சொற்களை இங்கே புதைத்துவிட்டு மௌனத்தைப் போர்த்தியபடி அமர்ந்திருப்பேன். பின் இவ்வாற்றங்கரை புங்கைமரக்கிளையில் மூக்குரசியபடி இருக்கும் ஜோடிக்கிளிகளின் ஒலியை கொஞ்சம் சேகரித்துக்கொண்டு திரும்புவேன் ” என்று. .



இருவரும் கை நிறைய சொற்களை அள்ளிக்கொண்டு திரும்பத்தொடங்கினார்கள். மெளனமாக நடந்துகொண்டிருந்தவனின் முதுகில் கொஞ்சம் சொற்களை அள்ளி அவள் வீசினாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிய அவனிடம் நாக்கைத் துருத்திக்காட்டிச் சிரித்தாள் அவள். முகம் எல்லாம் மின்னல் தெறிக்க , கீழ் உதட்டைக் கடித்தப்படி அவன் கையில் இருந்த சொற்களை அவள் மீது அள்ளி வீசினான். அவள் சிரித்தப்படி விலகி ஓடினாள். அவன் துரத்திவந்தான்.  மாறி மாறி துரத்தியபடி சொற்களை ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடிக் களித்திருந்தார்கள் . மான் கூட்டம் ஒன்று தங்கள் மேய்ச்சலை நிறுத்திவிட்டு தலை உயர்த்தி அவர்களை வேடிக்கைப் பார்த்திருந்தது.



யானையின் அடிவயிற்றை ஒத்த பருத்த பாறைமேல் அவர்கள் இருவரும் வான் பார்த்துப் படுத்திருந்தார்கள் . சூரியன் குளிரத்தொடங்கி இருந்த அந்த அந்திப்பொழுதில், “ அருவியின் ஓசையை என்னுள் கேட்கிறேன்,ஒற்றைப் பனித்துளி ஒன்று என் உச்சந்தலையில் இறங்குகிறது, இன்று தான் நிகழ்கிறது இது ” என்று அவன் சொன்னான். பிறகு மெல்லமாய் உன் பெயர் என்ன என்று வினவினான். அவள் சொன்னாள்  “ வன உயிர்கள் பெயர் அற்றவை “.  மலர்ந்து எழுந்த அவன், அவள் இரு பாதங்களையும் மடியில் எடுத்துக் கிடத்திக்கொண்டான். அவள் தன் காயங்களைக் காட்டினாள். இவைகள் என்றும் மறையாது என்றாள். வழித்தடங்களுக்குப் பழகிய உன் பாதங்கள் நீ கடந்து வந்த பாதையை மறக்கும் நாளில், உன் காயங்கள் மறையும். நீயும் ஓர்வன உயிர் ஆவாய் என்றான் அவன்.



அடர்ந்த அயனி மரங்களை மூங்கிலால் இணைத்து அவளுக்காக ஒரு பரண் அமைத்தான். மந்திகள் தங்கள் குட்டிகளுக்குப் பாதாம் கொட்டைகளை உடைத்து உண்ணப் பழக்குகையில் அவன் அவளுக்கு வனத்திடமிருந்து உணவைப் பெரும் முறையை சொல்லிக்கொடுத்தான். உண்ணத்தகுந்த கிழங்குகள்,தவிர்க்கவேண்டிய கனிகள், காதுகொடுக்க வேண்டிய ஒலிகள், கவனிக்கவேண்டிய கால்தடங்கள் என்று கானகத்தின் பக்கங்களை அவனோடு சேர்ந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாய் வாசிக்கத்தொடங்கினாள்.



அவள் உதிரம் கண்ட நாளில், வனம் அவனை புதுவிதமாய் அறிந்தது. இரண்டு மடங்கு விழிப்புக் கொண்டவனாக ஆனான் அவன். ஒரு தாயின் பரிவை கணநேரத்தில் தன்னுள் கொண்டுவந்திருந்தான். காய்ந்த சருகுகளையும், விறகுகளையும் இட்டு தீ மூட்டி விடிய விடிய விழித்திருந்தான். அவன் கண்கள் தீக்கங்கு போல் சிவந்து ஒளிர்ந்தது. அவள் உதிரம் தோய்ந்த நிலமெங்கும் சாம்பல் கலந்த மணலை இட்டு மூடினான். உதிர வாடையை  விலங்குகள் அறியாதிருக்க அத்துனை சாகசங்களையும் செய்து முடித்தான். அவனே வன ராஜா .அவனே சிறந்த தோழன்.



அது, வானம்  மஞ்சள்பூசிய இளமாலை நேரம். அவன் அவள் கைப்பற்றி இழுத்துக்கொண்டு ஓடினான். தூரத்தில் உடலெங்கும் மிக நேர்த்தியாக வரையப்பட்ட கோடுகளுடன் புலி ஒன்று வந்துகொண்டிருந்தது. மூச்சிரைக்க ஓடி ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொண்டார்கள். அவன் முதுகுக்குப் பின்னால் அவள் குறுகி அமர்ந்திருந்தாள். அவள் தன் முன்னுடலை அவன் மேல் சாய்த்திருந்தாள். அது அவளுக்கு கொஞ்சம் தைரியம்  தருவதாக இருந்தது. அவள் நெஞ்சு படபடப்போடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கொழுத்த புலி கொஞ்சம் தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த காட்டு எருமைக்கூட்டத்தை நின்று கவனித்து விட்டு, பின் அசிரத்தையோடு  ஒரு மர நிழலில் போய் படுத்துக்கொண்டது. அவன் சொன்னான் “ அதற்கு பசி இல்லை”.அவர்கள்  கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர்.



அவள்  இன்னமும் அவன் முதுகோடு ஒட்டி இருந்தாள். ஜோடி ஆமைகளின் மிக மெல்லிய நகர்வை அவன் முதுகில் உணரத்தொடங்கிய  வேளையில் அவன் திரும்பி அவள் விழிகளைப் பார்த்து சொன்னான் “ உன் ஆயுதங்கள் பலம் பொருந்தியவை “.  கரிய இரு நாகங்கள் முத்தமிட்டு விலகுவதைப்போல அவள் தன் புருவங்களைச் சுருக்கி “ புரியவில்லை “ என்றாள். அவன் உதட்டோரம் நெளியும் குறும்பு புன்னகையுடன் ''உன் ஆயுதங்களால் என்னை புறமுதுகில் தாக்காதே. ஒரு வீரன், ஆயுதங்களை நெஞ்சில் சந்திக்கவே விரும்புவான் '' என்றான்.  நொடிப்பொழுதில் கூசிச் சிவந்த மலர்முகத்தை ஒரு கையில் மூடிக்கொண்டு அவன் நடுநெஞ்சில் மறு கையைப் பதித்து பின்புறமாய் அவனைத் தள்ளி விட்டுவிட்டு  எழுந்து ஓடினாள். அந்நிமிடத்தில் செந்நிற செம்பருத்தி மலர்கள் மலர்ந்து ஒளிரத் தொடங்கின.



அந்த வனம் மிகப்புதிய இரவை அன்று சந்தித்தது. அடர்ந்த மௌனம் மான்களை பதற்றம் கொள்ளச் செய்தது. யானைகள் இருப்பு கொள்ளாமல் தங்கள் உடல்களை முன்னும் பின்னும் அசைத்தபடி இருந்தன. பறவைகள் தங்கள் இணை சேராமல் விழித்திருந்தன. காற்று மூச்சை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தது. மரங்கள் துவண்டு தலை சாய்த்திருந்தன. அவனும் அவளும் எதிர் எதிர் பரண்களில் வானத்தை வெறித்திருந்தார்கள். அவர்கள் இருவரின்  மூச்சுக்காற்றுகளும்  பாம்புகள் சீறும் ஒலியைப்போல விடியல் வரை ஒலித்திருந்தன. என்றும் அறியா புழுக்கத்தை வனம் அன்று கண்டிருந்தது.



வனம், தன் உறக்கம் தொலைத்த இரவுக்குப் பின்பான பகல் அவர்களுக்கு மிக நீண்டதாய் இருந்தது. அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். பசியை முற்றிலும் மறந்திருந்திருந்தார்கள். மௌனம் இருவரையும் கவ்விப்பிடித்திருந்தது. மனங்கள் இரண்டும் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. எப்போதும் அவள் இயல்பாய் பற்றிக்கொள்ளும் அவனது விரல்கள் அன்று இயல்பைத் தொலைத்திருந்தது. அந்த சின்ன நடுக்கம் அவள் விரல்களிலா? அவன்விரல்களிலா? அவர்கள் சொற்களைத் தோண்டி எடுத்த அந்த சிற்றாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கமாக அவர்கள் நீராடும் இடம் அது தான். கண்கள் சந்திக்கத் துணிவற்று, அவள் அருகிலிருந்த வெண்ணிற காட்டுமல்லிப் பூக்களைச்  சேகரிக்கத்தொடங்கினாள். அவன் மரத்துண்டு ஒன்றை எடுத்துவந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கத்தியைக்கொண்டு செதுக்கத்தொடங்கினான்.



கதிரவன் உச்சியை அடைந்த பொழுதில், கொஞ்சம் மரவள்ளிக்கிழங்குகளையும், கொய்யாக்கனிகளையும் கொண்டுவந்தான்அவன். அவர்கள் மர வேர் ஒன்றில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். கொய்யாக்கனிகளே அவர்களின்  விருப்ப உணவாக இருந்தது. சூரியனின் கதிர்கள் அடர்ந்த மரங்களைக் கடந்து வந்து அவர்களைத் தழுவிவிடத் தவித்துக்கொண்டிருந்தது.  அவள், சேகரித்த காட்டுமல்லிப் பூக்களை  மாலையாகத் தொடுக்கத்தொடங்கினாள். அவன் வலிய தன் கரங்களை நீட்டி மிக மென்மையாய் அவள் இதழோரம் ஒட்டியிருந்த கொய்யா விதையை எடுத்தான். பின் எழுந்து சென்று ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டு மீண்டும் மரத்துண்டை செதுக்கத்தொடங்கினான்.



அந்த நாள் அவர்களின் பிரக்ஞை அற்று மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கதிரவன் மறையத்தொடங்கிய அந்திப்பொழுதில் அவன் நீராடச் சென்றான். அவள் மலர்மாலையில் கொஞ்சம் நீர் அள்ளித் தெளித்துவைத்துவிட்டு அவனைப் பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்திருந்தாள். யானையின் நீராட்டம் நீங்கள் கண்டதுண்டா? கரிய அதன் தோள்களில்  நீர்த்துளிகள் சரிந்து தெறிக்கும் காட்சி கிளர்ச்சி மிகுந்தவை,  காண்போரின் உடலில் அதன் குளுமையை உணரச்செய்பவை.

“  நீர் என்பது வெறும் நீரல்ல. அது, காலங்களை தன்னிடத்தில் பொதித்து வைத்திருக்கிறது. அது நம் மனங்களுக்குத் தக்கபடி தன்னைப்  பிரதிபலிக்கவல்லது “

அவன் கரை ஏறிவந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் எழுந்து, மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்தாள். அந்த ஆறு அவளைக் கைவிரித்து அழைத்தது. புற்களும் கருகிவிடக்கூடிய மிக மிகுந்த வெம்மை அவள் மூச்சுக்காற்றில் ஏறி இருந்தது. அவள் தன்உடலை நீருக்குள் நழுவவிட்டாள். காலைப்பனியின் சிலுசிலுப்பை பெற்றிருந்த அந்த ஆற்றுநீர் அவள் உடலின் அத்துனை திசைகளிலும் மோதிச் சிலிர்த்தது. அவள் மெதுமெதுவாய் குளிரத்தொடங்கினாள்.



ஈரஉடை அசைய நடந்து வந்து அவன் சிலையாய் சமைந்திருந்த பாறைமீது அவன் தோள்உரசி அமர்ந்தாள் அவள். கடலும்,ஆறும் ஒன்றுசேரும் இடத்தைப்போல் குளுமையும் வெம்மையும், மோதி உரசிக்கொண்டது அப்போது. அவன் மெல்ல திரும்பி அவள் கூந்தலிலிருந்து முதுகில் சொட்டிக்கொண்டிருந்த நீரை உள்ளங்கை ஏந்தி சேகரித்தான். பின் மெல்ல கண்மூடி அந்நீரைப் பருகினான். “ தாகம் கொண்ட விலங்கின் உதடுகள் அவை “. அவளது திரண்ட தோள்களில் நடுங்கிக்கொண்டிருந்த நீர் முத்துக்களை சுட்டுவிரல் கொண்டு துடைக்கத் தொடங்கினான். வானம் செந்நிறம் கொள்ளத்தொடங்கியது. பின் அவள் பாதங்களை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு சொன்னான் “ உன் காயங்கள் ஆறி வருகிறது “. அவள் சொன்னாள் “ நீ காயங்கள் அற்றவன் “.மெல்லிய புன்னகை ஒன்றை தவழவிட்டபடி குனிந்து அவள் பாத விரல்கள் ஒவ்வொன்றாய் வருடி முத்தமிட்டான். 



அவன் அப்படித்தான். மிகுந்த ரசனைக்காரன், எதிலும் நிதானம் தவறாதவன். காட்டு முயலை சுட்டு சமைக்கையிலும் தன் தனித்த ரசனையை,ருசியை அதில் ஏற்றிவிடவல்லவன். ஒருமலரை நுகர விரும்பினாலும் இதழ் இதழாக மென்மையாக வருடி, அதன் மகரந்தப்பரப்புகளை முத்தமிட்டு பின் நுகர்ந்து ரசிப்பான்.  உச்சிக்கொம்புத்தேன் கிடைக்கும் நாளில் அடையோடு எடுத்து தின்பவன் அல்ல அவன். தேக்கு மரத்தின்  தளிர் இலையைக் கிண்ணம் போல் செய்து அதில் தேனை பிழிந்து கொள்வான். பின் அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போய் நீரை ஒட்டிஇருக்கும் பாறையில் இருவருமாக அமர்ந்துகொண்டு பாதங்களை நீருக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்ளச் சொல்வான். பிறகு ஒரே ஒரு துளி தேனை நுனிநாக்கில் சொட்டி சுவைக்கச்சொல்லுவான். பாதங்களில் குறுகுறுத்து ஓடும் சில்லென்ற ஆற்றுநீரும் நுனிநாக்கில் கரையும் கொம்புத்தேனும் தேவ சுகத்தை தரும் நேரம் அது. பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேனை சுவைத்து முடிப்பார்கள். அவன் ரசனையே அலாதி..



அவள் பாதங்களை முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவள் தொடுத்து வைத்திருந்த மலர்மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். ஜோடிக்கிளிகள் கத்திக்கொண்டு வந்து மரக்கிளையில் அமர்ந்தன. கிளிகளை அவள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவள் கழுத்து நரம்பில் விரல் வருடிச் சொன்னான் “ உன் ஆடைகள் மிகவும் கந்தல் ஆகிவிட்டது “. பௌர்ணமி நிலவு திரண்டு எழுந்து தன் பால்வண்ண ஒளியை வனமெங்கும் பரப்பத் தொடங்கிய நேரம் அது. அவள், “ இன்று நிலவை பார்த்தாயா? அதன் ஒளி “ வெண்பட்டு விரிப்பு போல இருக்கிறதல்லவா?! “ என்றாள். அவன் ஆம் என்று தலையசைத்து “நாம் இருவரும் அவ்வெண்ணிலாவின் ஒளியை இவ்விரவில் ஆடையாக அணிவோமா?" என்றான். செந்நிற மீன்கள் மேல்எழுந்து அவள்  இரு கன்னங்களிலும் துள்ளத் தொடங்கியது. அவள் தனது வலது பாதத்தின் பெருவிரலால் அவன் மென்மயிர் படர்ந்த மார்பில் மெல்ல அழுத்தி சிரித்துவிட்டு எழுந்து ஓடமுயன்றாள். தொலைவில்  ஒரு யானை தன் வலிய துதிக்கை கொண்டு மூங்கில் புதர்களை வளைத்து இழுத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. 



 சிரிப்பொலி வனமெங்கும் பட்டுத்தெறிக்க வனம் குதூகலம் கொண்டது. பறவைகள் கூவித்திளைத்தன. காற்று சுழன்று வீச மரங்கள் தலை சிலுப்பி ஆடின. விலங்கினங்கள் தங்கள் இணை சேர விளைந்தன. திருவிழாக்காலத்து தேர் தெருவைப்போல் கலவையான ஒலியில் காடு கள்  வெறி கொண்டது. தூறலில் தொடங்கிய மழை வேகம் கொண்டு அடைமழையாய் கொட்டித்தீர்த்தது.  நிலவின் மல்லிகை ஒளியில் அவள் அவனது மச்சங்களைக் கண்ட அவ்இரவில்தான் அவனது  தழும்புகளையும் காண நேர்ந்தது. அவனும் வடுக்களோடு வாழ்பவனே . வனம் கண்ட மிகுமழை, களைத்து ஓய்கையில் கதிரவன் காடேறி வந்தான். தன் மெல்லிய ஒளிக்கரங்களால் துவண்டிருந்த உயிர்களின் தேகம்தொட்டு வருடத்தொடங்கினான். 



                           ******* 

செ.சுஜாதா.
நன்றி: மலைகள்.காம்.





Tuesday, June 18, 2013

மூன்றாம் பாலினம்



பொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான பெண்களையும், பயந்த மென்மையான ஆண்களையும் நாம் பார்க்காமலில்லை. ஆண் மட்டுமே செய்யமுடியும் என்றிருந்த வேலைகளைப் பெண்களும் இன்று செய்ய வந்துவிட்டனர். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமத்திலும் ஏர் ஓட்டுவது, மரம் ஏறுவது என்று பெண்கள் எல்லா வேலைகளையும் ஒருகை பார்க்கிறார்கள். ஆக முழு ஆண், முழு பெண் என்றும் யாரும் இங்கு இல்லை.

மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகள் நம்மைக் காட்டிலும் கொஞ்சம் அதிக சதவிகிதம் எதிர்பாலினக் கலப்பு உள்ளவர்கள் அவ்வளவே. இந்த அறிதல் நம் அனைவருக்கும் ஓரளவு உண்டு என்றபோதும் ஏனோ நம்மால் அவர்களை சகஜமாகப் பாவிக்கமுடிவதில்லை. நமக்கு அவர்கள் மீதான கருணை என்பது 1,2 ரூபாயோடு முடிந்துவிடுகிறது.

நான் அரவாணிகளைப் பிச்சை எடுப்பவர்களாக மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களும் கூட என்பது கேள்விப்பட்ட ஒரு செய்தி. மற்றபடி அவர்களை வேறு எந்தப் பணியிலும் நான் கண்டதே இல்லை. இவர்களுக்கு வேறு வாய்ப்புகளே இல்லையா? நர்த்தகி,கல்கி,வித்யா என்று வெகு சிலரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சமூகத்தில் தங்களுக்கான இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள். தங்கள் அடையாளங்களை நம்பிக்கையோடு ஆழப் பதித்திருக்கிறார்கள். இவர்களைப் போல அல்லாமல் படிப்பறிவு, போராட்டக் குணம், தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, தங்கள் இருப்பு சார்ந்த அறிதல் ஏதும் அற்ற வெகு எளிய நிலையில் உள்ள அரவாணிகள் கை ஏந்தி நிற்பதையே  தங்கள் வாழ்வாக முடிவுசெய்துவிட்டவர்களா???

நிச்சயமாக இல்லை. அரவாணிகள் இது தான் தங்கள் தலையெழுத்து என்று முடிவுக்கு வராமல் தங்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் அவர்களின் நல்வாழ்வு அவர்கள் கையில். அப்படி ஒரு நம்பிக்கையின் சிறு விதையாக மூன்றாம்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். படிப்பறிவோ, இன்னபிற சிறப்புத் தகுதிகளோ ஏதும் அற்ற , தன் சுயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை மட்டுமே கொண்டவர். அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தன் வாழ்வை வெகு எளிமையாக, அதே நேரம் கவுரவமாக, சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.

இவர் பெயர் "குமாரி". பெங்களூரில் ஒருஅம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருக்கிறார். இவரை நான் முதன் முதலில் பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. உடனே அவரிடம் பேசவேண்டும் என்று மனம் உந்ததொடங்கிவிட்டது. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, அவர் தவறாக நினைத்துவிடுவாரா? கோபப்பட்டுவிடுவாரோ? இப்படி யோசித்துக்கொண்டு ஒரு வாரமாகப் போகும்போதும், வரும்போதும் அவரை பார்த்தபடி சென்றுகொண்டிருந்தேன்.

நண்பர் ஒருவர் பேசும்போது சொன்னார், தான் திருப்பதிக்கு ரயிலில் செல்லும்போது அரவாணிகள் ஒரு முரட்டுத் தடியோடு வண்டியில் ஏறி கண்ணில் படுபவர்களையெல்லாம் அடித்து பணம் வாங்கிச்சென்றதாகவும், தான் நல்லவேளையாக அடிவிழாமல் தப்பித்ததாகவும். அவர்களின் அந்தக் கோபம் ஒரு ருத்திர தாண்டவம் போல் இருந்ததாகச் சொன்ன அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அவர்களின் அத்தனை கோபத்திற்கும் நாம் தானே காரணம்? எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு மூச்சு திணறும் அவர்கள் இயலாமையின் உச்சத்தில் பெரும் கோபம் கொண்டு கதவுகளை உடைக்கத்துணிகிறார்கள். அதில் தவறு சொல்ல நமக்கென்ன உரிமை? என்று. அவர் சொன்னது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்.

நான் ஒரு முடிவுக்கு வந்தேன் அந்த பெண் என்மேல் கோபம் கொண்டு அறைந்தாலும் சரி இன்று பேசிவிடுவது என்று. அன்று காலை 'லிவிங் ஸ்மைல் வித்யா' அவர்களின் முகம்புத்தகத்தில் இன்று [april 15] அரவாணிகள் தினம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரை சந்திக்க இதைவிடப் பொருத்தமான நாள் உண்டா என்று மாலையில் என் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டேன்.

நான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். அரவாணிகள் பற்றிய நம் தயக்கங்கள், அறிதல்கள் அனைத்தையும் உடைத்து எறியும்படி இருந்தது அவர் பேச்சு.

அவர் பெயர் குமாரி, 30 வயதாகிறது. திருப்பத்தூர் தான் அவர் சொந்த ஊர். பெங்களூர் வந்து 20 வருடம்போல ஆகப்போகிறது. அம்மா, அப்பா, 2 அண்ணன்கள்,1 அக்கா என்று பெரிய குடும்பத்தில் பிறந்த அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்று நான் சொல்லத்தேவை இல்லை. அரவாணிகளுக்கு தங்கள் சுயத்தின் மேல் விழும் முதல் அடியே  அவரவர்  குடும்ப உறுப்பினர்கள் மூலம் வந்து சேர்வது பெரும் துரதிஷ்டம். குமாரியும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர் வீட்டை விட்டு வெளியேறியபோதும் பிச்சை எடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்திருக்கிறார். தன் தந்தையோடு அவர் செய்துவந்த காரவேலை எனப்படும் கட்டிட வேலையே இங்கு பெங்களூரிலும் செய்துவந்திருக்கிறார். பின் அங்கு பிரச்சனைகள் ஏற்படவே அந்த வேலையே விட்டுவிட்டுக் கடந்த 6 வருடமாக இங்கு பூ விற்றுப் பிழைக்கிறார். கட்டிட வேலை செய்யும் போது என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்தார் என்று அவர் சொல்லவில்லை, அதை சுலபமாக நாமே யூகிக்கமுடியும்.

இங்கு கோவில் வாசலில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சகஜமாகப் பழகுகிறார்கள். பூ வாங்கிக்கொண்டு 'மீதி பணத்தை நாளை கழித்துக்கொள்' என்று சொல்லிவிட்டுச் செல்லும் அளவுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். பொதுவாக அரவாணிகள் தங்களுக்குள் ஒருவரை தத்தெடுத்துக்கொண்டு அவரை தன் மகளாகவும், தன்னை தாயாகவும் பாவித்து வாழ்வது வழக்கம். அது வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பை, அர்த்தத்தை  உண்டாக்கும். இவர் அப்படி யாரையும் தத்தெடுக்கவிரும்பவில்லை. அவர்களோடு கூட்டமாக வாழவும் விரும்பவில்லை. ஆனால் அவர்களோடு நட்பாக இருக்கிறார். அவர் தோழிகளும் குமாரியின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து போகிறார்கள். இவர் பிச்சை எடுக்காமல் சொந்தகாலில் நிற்பது பற்றி இவரின் தோழிகளுக்கும் சந்தோசமாம்.

தனியாக வாடகைக்கு வீடெடுத்து வாழ்கிறார். வாடகை, தன் செலவுபோக எஞ்சும் சொற்ப பணத்தை வங்கியில் சேமிக்கிறார். எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. அம்மன் சிலையை வீட்டில் வைத்து தினம் பூஜை செய்கிறார். ஆடி மாதம் அந்த சாமிக்குச் சின்னதாக விழா எடுத்து 10,20 பேருக்கு அன்று அன்னதானம் வழங்குகிறார். இவரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என்று எதுவும் இல்லை. ரேஷன் கார்டு விண்ணப்பிக்கச் சென்றால் அங்கு கையெழுத்து வாங்கிவா, இந்த சீட்டு வாங்கிவா என்று அலைக்கழித்திருக்கிறார்கள். ரேஷன் கார்டு இல்லாதது மட்டுமே அவருக்குச் சின்ன வருத்தம். வருங்காலம் பற்றிப் பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை. உடல் நலம் அற்று இருக்கும்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியாக இருக்கிறார்களாம். அக்கம்பக்கம் இருப்பவர்கள் அனைவரும் வீட்டுவேலை செய்பவர்கள், கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுபவர்கள் என்று ஏழை மக்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், கூடி வாழ்வதும் என்று நலிந்த தங்கள் வாழ்வை காத்துக்கொள்பவர்கள்.

அரவாணிகள் தினம் பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவரின் வாழ்க்கையை  சிறப்பாக வாழ அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்பா, அம்மா மட்டும் மனம் மாறி அவ்வப்போது இவரை பார்க்க வருகிறார்கள். சொத்து எதிலும் அவருக்குப் பங்கு தரப்படவில்லை. அதைப் பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவும் இல்லை. அவர் அருகிலேயே சசிகலா என்ற குட்டிப்பெண் பூ விற்கிறாள். அவள் தான் குமாரி இல்லாதபோது அவர்கடையையும் சேர்த்துப் பார்த்துகொள்வது, ஒன்றாக சாப்பிடுவது என்று நட்பு பாராடுகிறாள். தன் கடைசிக் காலத்தில் முடியாமல் நோயில் விழும்போது தன் வங்கி சேமிப்பு பணத்தைப் பெற்றுக்கொண்டு யாரேனும் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். தன் வாழ்க்கையில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும், கவலையும் இன்றி இந்த நாளை சந்தோசமாகவும் ,நிம்மதியாகவும் கடந்துகொண்டிருக்கிறார் . யோசித்துப்பாருங்கள் இத்தனை வாழ்வும் வசதிகளும் உள்ள நாம் விரும்புவதும், போராடுவதும் எதற்காக? இதே நிம்மதிக்காகத் தானே? 'இன்னைக்கு ரொம்ப நல்ல தூக்கம்.. படுத்தது தான் தெரியும்..காலைல தான் எழுந்தேன்.'என்று, என்றாவது வாய்த்துவிடும் நிம்மதியான உறக்கத்தை ஸ்லாகித்துச் சொல்லும் நிலைமையில் தானே நம் வாழ்வு இருக்கிறது??

                                           *********************       
நன்றி: மலைகள்.காம்



***.

Sunday, April 14, 2013

முதல் முத்தம்





அதுஅத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி
மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது
கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது
நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை
ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இதுபோன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று
*****
நன்றி:மலைகள்.காம் 

Tuesday, April 2, 2013

மரணக்குறிப்பு





நான் அந்த முடிவை எடுத்த நொடி பெரும் விடுதலை  உணர்வை அடைந்திருந்தேன்.சீழ் கட்டிய புண் ஒன்றை கீறி திறந்ததன் ஆசுவாசம்.இதை தற்கொலை என்று சொல்லாதீர்கள்.கொலை என்பது வன்முறை.விருப்பமற்ற ஒருவரிடம் மரணத்தை வலிந்து திணிப்பது.ஆனால் என்னுடைய மரணம் அப்படியானதல்ல.கதறிக்கொண்டு ஓடி ,கண்ணை மூடியபடி  கிணற்றில் விழுவது போல் அல்ல ,ஆடைகளை சாவகாசமாய் களைந்துவிட்டு  , கை உயர்த்தி கூந்தலை கொண்டையாக்கிகொண்டு ,சோப்பும்,மஞ்சள் கிண்ணமுமாக ,திறந்த முதுகில் சூரியனை படரவிட்டபடி ஆற்றில் குளிக்க இறங்கும் ஓர் இளம் பெண்ணை கற்பனை செய்துகொள்ளுங்கள்.எவ்வளவு ரசனையான காட்சி?!!அத்தகைய லாவகத்துடன்,ரசித்து என் மரணத்திற்குள் இறங்க இருக்கிறேன்.இப்போது  சொல்லுங்கள் அது தற்கொலையா?

சிலிண்டரை திறந்து விட்டு,அறை முழுதும் நிரப்பி ,ஒரு தீக்குச்சி உரசலில் வெடித்து சிதறலாமா?என்னை  நவீன ஜான்சி ராணி போல் உணரச்செய்யும் என் பிரியமான இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்று மணலை திருடிக்கொண்டு ஓடி வரும் அந்த லாரியின் முகத்தில் மோதிச்சரியலாமா?இல்லை இல்லை…என் மரணத்தை வரவேற்கும் முறை இதுவல்ல.மிக மென்மையாய் ,ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி அணுகவேண்டும்.ம்ம் ..எங்கள் தோட்டத்து பூச்செடிக்கு போடும் மருந்து ஒன்று வீட்டின் கடைகோடி மூலையில் ஒரு அலமாரியில் இருக்கிறது.குழந்தைகள் கைக்கு எட்டிவிட கூடாதென்று அது அங்கு அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.அது எப்படி இருக்கும்?என்ன நிறம்?எதையும் இதுவரை அறிய முயன்றதில்லை.அதை குடித்தால் உடனே உயிர் போய்விடுமா?தோட்டக்காரன் செடிக்கு மருந்தடிக்கும் போது அருகில் சென்றதில்லை.மறுநாள் இறந்துகிடக்கும் புழுக்களை குரூரமான சந்தோசத்துடன் எண்ணிபார்த்ததுண்டு.அவை துடி துடித்து இறந்திருக்குமா?இல்லை மலர்கள் உதிர்வது போல இலையிலிருந்து கண்மூடி உதிர்ந்திருக்குமா?எப்படியாயினும் புழுக்களுக்கான விஷம் அது.இந்த வீட்டில் நானும் ஒரு புழு என்பதை உணர்ந்த இந்த கணம் அந்த விஷத்தையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

நான் ஒரு சொற்க்கிடங்கு.அள்ள அள்ள குறையாத அமுத பாத்திரம் அது.அதிலிருந்து முடிந்தவரை அள்ளி என் வாழ்வில் உடன் வந்தவர்களுக்கு தந்துவிட்டு போக விரும்புகிறேன்.நான் எழுதபோகும் முதல் கடிதம் என் குருவுக்கு.ஆம் குரு தான் அதில் மாற்றம் இல்லை.இதுவே நான் அவருக்கு எழுதப்போகும் கடைசி கடிதம்.இதற்க்கு முன் நிறைய எழுதி இருக்கிறேன்.என் குழப்பங்களை,கஷ்டங்களை,தீர்வுக்கான வழிகளை,மன உளைச்சல்களை என்று எண்ணில் அடங்கா மின் அஞ்சல்கள்,குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறேன்.ஏதோ கடவுளிடமே நேரடியாக முறையிட்டு விட்டதை போன்றதொரு நிம்மதி அப்போது கிடைக்கும்.கடவுளுக்கு கண் இல்லை,காது இல்லை,வாயும் இல்லை.நம் எந்த புலம்பலும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது,எரிச்சல் படுத்தாது.ஆனால் பாவம் அவர் மனிதராயிற்றே!!அவரிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

என் இரண்டாவது கடிதம் என் தோழிகளுக்கு.எனக்கு எல்லா தோழிகளும் ஒன்று தான்.யாரிடமும் தனிப்பட்ட பகிர்வோ,ரகசியமோ இருந்ததில்லை.என் சந்தோசங்களை,வருத்தங்களை எங்கள் தேநீர் மேஜையில் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை என் ஆணி வேரில் விழுந்த அடியை தவிர..அவர்களுக்கு என் மரணம் பேரதிர்ச்சியை தரலாம்.எந்நேரமும் வெடிச்சிரிப்பும்,விளையாட்டு பேச்சுமாக இருக்கும் என்னை முழுதும் படிக்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தலாம்.எந்த இறுக்கமான சூழ்நிலையையும் கட்டவிழ்த்து கலகலப்பாக்கும்  நான் அவர்களை கண்ணீரோடு நிற்கவைக்கப்போவதை எண்ணி வேதனை கொள்கிறேன்.

என் கடைசி கடிதம் என் பிள்ளைகளுக்கு.இங்கு தான் நான் சற்று கவனமாக இருக்கவேண்டும்.அடர்ந்து வீசும் முலைப்பாலின் மணத்திற்கு இருக்கும் வல்லமையை நான் பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.அது எந்நேரமும் என் முடிவை தகர்த்துவிடலாம்.முடிச்சிடப்பட்ட என் கர்ப்ப பை எந்த நேரமும் என்னை உள்ளிழுத்து சிறை படுத்தலாம்.என் தாய்மைக்கு நான் சமாதானம் சொல்லியாகவேண்டும்.இங்கு நான் சற்று கடுமையாகவே பதில் உரைக்கவேண்டும்.என் இருப்பு அவர்களையும் ஒரு புழுவாக மாற்றக்கூடும்.அவர்களுக்கேனும் முதுகெலும்பு முளைக்கவேண்டும்.அதற்க்கு அவர்கள் பற்றுகோலை இழந்தாகவேண்டும்.தடுமாறி,தளர்ந்து பின் முளைத்து கிளை பரப்புவார்கள்.என் இறுதி நம்பிக்கையை அவர்களிடம் தான் விட்டு செல்கிறேன்.அவர்கள் வாழ்வார்கள்.ஓடு உடைத்து வெளியேறும் வலி அறிந்தால் மட்டுமே பறவைக்கு வானம் சொந்தம்.வலி அறியாமல் என்னை வளர்த்துவிட்ட என் தாயை நான் நினைத்துக்கொள்கிறேன்.அம்மா,என்னை மன்னியுங்கள்..

இந்த வீடு என் மரணத்தை எப்படி எதிர்கொள்ளும்?சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றுவிட்ட வேலைக்காரியால் எப்படி வீட்டின் அன்றாட வேலைகள் தடுமாறிப்போகுமோ அப்படி கொஞ்சம் தடுமாறித்தான் போகும்.ஆனாலும் சீக்கிரமாக சுதாரித்துக்கொள்ளும்.ஆம்,”கூரை மேல் சோற்றை விட்டெறிந்தால் ஆயிரம் காக்கா”என்ற வாக்கியத்தை என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அறிந்து வைத்திருக்கிறது.சோறு உள்ளவரை காக்கைகளுக்கும்  பஞ்சம் இல்லை.

எனக்கு மெலிதாக ஒரு அச்சம் வருகிறது.இப்படியே பேசி பேசியே என் துக்கத்தை நான் கடந்துவிடுவேனோ?!என் பயத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.என் நான்காவது வயதில் என் அம்மா இதே முடிவை எடுத்திருந்தார்.நானும்,அண்ணனும் விரும்பி கேட்ட திரைப்படம் ஒன்றிற்கு கடைசி கடைசியாக அழைத்து சென்றுவிட்டு வந்து பின் சாகலாம் என்ற முடிவோடு எங்களை அழைத்துச்சென்றார்.உருளைக்கிழங்கு போண்டாவை ருசித்தபடி நாங்கள் ரசித்து பார்த்த அந்த படம் முழு நீள நகைச்சுவை திரைப்படம்.விழுந்து விழுந்து சிரித்து,படம் முடிந்து வெளியே வரும்போது அவள் துக்கம் முழுதும் கரைந்து போயிருந்ததையும்,குடிகார புருசனோடு முடிந்தவரை மல்லுக்கட்டி வாழ்ந்துவிடுவது என்ற முடிவோடு வீடுவந்து சேர்ந்ததையும் அம்மா பின்னாளில் எனக்கு சொல்லியிருக்கிறார்.ம்ம்,பார்ப்போம்..

பெண்களின் கனவுக்குள் நுழைந்து பார்த்தால் நீங்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.அத்தனை சட்ட திட்டங்களையும்,கட்டமைப்புகளையும் உடைத்து நொறுக்கி  அதன் மேல் எழுந்து நின்றிருக்கும் அவள் கனவுக்கோட்டை.அதற்காக நீங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.அவர்களுக்கு  கனவு காண மட்டுமே தெரியும்.அதை நடைமுறைப்படுத்திக்காட்டும் பரிணாம வளர்ச்சியை அவர்கள் இன்னும் எட்டவில்லை.எனவே நீங்கள் அவர்களை கையாளும் பாணியில் அவசர மாற்றம் ஏதும் செய்யத்தேவை இல்லை.அலை கரை கடக்காதவரை நீங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்,குந்தி மலம் கழிக்கலாம்,போதையோடு புரண்டு கிடக்கலாம்,புணர்ந்து கிடக்கலாம்.பாதகம் இல்லை.  நான் சொல்லவந்தது இதுவல்ல.எல்லா பெண்ணும் செயல்படுத்திக்காட்டப்படாத தற்கொலை கனவு ஒன்றை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிருப்பாள்.தற்காலிக வலி நிவாரணியாய் அந்தக்கனவுக்குள் சற்று இளைப்பாறி வந்திருப்பாள்.

இறுதியாக “என் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல”என்ற கடிதம் ஒன்றை எழுதி வைக்கவேண்டும்.ஆமாம்,நான் கொள்ளும் இன்பம்,துன்பம் யாவற்றிற்கும் நான் மட்டுமே பொறுப்பாகமுடியும்.யாரையும் கை நீட்டி காரணமாக்குவது சுத்த பேடித்தனம்.மரண வாசலில் நான் ஒரு புழு அல்ல.உணர்வும்,உதிரமும் ஆகிய மனிதன்.’மனுஷி’ என்று சொல்ல வேண்டுமோ?வாழ்க்கையில் தான் ஆண்,பெண் என்ற பேதம் எல்லாம்..மரணத்தின் முன் அத்தனையும் வெறும் உடல்கள்  தான்.இங்காவது நான் நானாக இருக்க விரும்புகிறேன்.என் இந்த முடிவேனும் என் சுயவிருப்பத்தோடு,தனிச்சையாக ,நிர்பந்தங்கள் ஏதுமற்றதாய் இருக்க விழைகிறேன்.ஆம், என் முடிவுக்கு நானே பொறுப்பு.

என் வாழ்வில் வந்து போன அத்தனை பேரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.நான் கடந்து வந்த அத்துனை சம்பவங்களையும் பாரபட்சம் இன்றி ஒரு முறை புரட்டிப்பார்க்கிறேன்.ஆஹா!!அத்துனை சம்பவங்களும் ஒன்று போல் தெரிகிறதே?! ‘ விடுபடல் ‘ என்பது இது தானா?எந்த உணர்வுகளும் கலக்காமல் தெளிந்த காட்சிகளாக அனைத்தையும் பார்க்கமுடிவது எவ்வளவு லேசாக,பாரமற்று இருக்கிறது?!!கடவுள் இப்படி தான் இப்பூமியை பார்ப்பாரோ?!ஆம்,அப்படி தான் இருக்கவேண்டும்,இல்லை என்றால் அவர் இந்நேரம் பைத்தியமாகி இருப்பார்.

சரி,நான்  இறுதியாக உங்களுக்கு ஒன்றை சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.நான் எழுதி எழுதியே என் துக்கத்திலிருந்து மீண்டிருக்கவேண்டும் என்றும்,நான் என் முடிவை கைவிட்டு என் அம்மாவை போல்  மீண்டும் வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்றும் வருந்தி இறைவனை பிரார்த்திப்பவரா நீங்கள்?மன்னிக்கவும்.நீங்கள் இவ்வுலகில் வாழும் தகுதியை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டிஇருக்கிறது.மாறாக இதை மற்றுமொரு செய்தியாக மட்டுமே கடந்து போகிறவராகவோ அல்லது என் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே உள்ளவராகவோ நீங்கள் இருக்கிறீர்களா?..வாழ்த்துக்கள்!!! .


                                                    *********************
நன்றி:மலைகள்.காம்