பண்டிகைக்கு வந்து திரும்பும் மகளுக்கு
பலகாரங்களை பையில் அடுக்குகிறாள்
அம்மா
பொறந்த வீட்டையே அள்ளி பைக்குள் போடும்
அவள்
நிரப்பவே முடியாத வெற்றிடம் ஒன்றை நிரப்ப முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறாள்
என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
எங்கிருந்தோ மிதந்து வரும்
தாளித்த வாசனை
ரவிக்கை இல்லா வெள்ளைசீலைக்காரியின்
சுருக்கம் நிறைந்த கைகளை
நினைவுபடுத்தும்
கறந்த பாலின் வாசனை
என் மார் முட்டியவளின்
வாயோர சுளிப்பை
நினைவுபடுத்தும்
எப்போதும்
இரும்பின் வாசனை உதிரத்திற்கு
என்று சொன்ன கவி
தூமைக் காலம் தோறும்
நினைவில் வருகிறான்
மழைத்த மண்ணின் வாசனை
தாய் வீட்டை தவறாமல்
கொண்டுவந்து சேர்க்கும்
மல்லிகையின் வாசனை
ஏனோ அக்காளின்
கல்யாணத்தையே நினைவுபடுத்தும்
சாராய வாடைக்கும்
மூத்திர வாடைக்கும் கூட
கொஞ்சம் நினைவுகள்
மிச்சம்
உன் வியர்வையின் வாசனையை
நினைவுபடுத்த
வாசனைகள் தோற்று
மண்டியிட்டுக் கிடக்குமந்த
ஒற்றைப் பின் அந்தி மட்டுமே
கைவசம்
****
விவரம் தெரிந்த நாள்முதலாய்
கூடவே வந்த மச்சம் ஒன்று
விரலை விட்டு நழுவிச் சென்றது
பார்க்கப் பார்க்கவே கரைந்து
காணாமல் போனது
அத்தனைப் பிடிவாதமாய்
நரை கூடத்தொடங்கிவிட்ட தேய்பிறைப் பொழுதில்
கன்னத்தில் வந்து சிந்தியிருக்கிறது புதியதொரு மச்சம்
கிள்ளக் கிள்ளத் திமிரி
அடர்ந்து வருகிறது
அத்தனை தீர்க்கமாய்
மச்சங்களுக்கு
காதலின் சாயல்
என்பேன் நான்
செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளின்
குதூகலத்தை ஒத்தது
கனவுகளை நிஜமாக்கிப் பார்க்கும்
இந்த நாடகம்
அடுப்பு போலவே ஒரு அடுப்பு
சோறு போலவே ஒரு பிடிசோறு
அம்மா போலவே ஒரு அம்மா
அப்பா போலவே ஒரு அப்பா
பிள்ளை போலவே ஒரு பிள்ளை
வாழ்க்கை போலவே ஒரு வாழ்க்கை
நாடகம் முடிந்து
எழுந்து நகர்கையில்
வலியுடன் முறியும் கனவுகள்
பாதியில் கைவிடப்பட்ட சிற்பங்கள்
நளினத்தைக் கைவிட்டு
வெடித்துச் சிரித்து மகிழ்பவள்
கெட்டவார்த்தைகளை இனிப்பு போல
மென்று சுவைப்பவள்
விலகும் மாராப்பில்
அக்கறையற்று இருப்பவள்
குறுகுறுக்கும் கண்களுக்கு
அழுக்கேறிய யோனியைத் திறந்து காட்டி
அலறவிடுபவள்
அச்சத்தைத் துடைத்துவிட்ட
பீளை வடியும் கண் கொண்டவள்
இரைச்சல்களுக்கு நடுவே
தெருநாயை அணைத்தபடி
உறங்கிப் போகிறவள்
மரத்திலாடும் இலைகளை கண்கொட்டாமல் ரசித்துக்கிடப்பவள்
இரவின் வீதியில் அரசியென
நகர்வலம் வரும்
அவள் மட்டுமே
கட்டுகளை உடைத்தெறிந்து
நெஞ்சு நிமிர்த்தி
வெளியேற முடிந்தவள்
அடுத்தவன் பங்கில்
அறியாமல் எடுத்த ஒரு விள்ளல்
இருட்டில் தரப்பட்ட அவசர முத்தம்
பட்டுச்சட்டையில் சிந்திய குங்குமம்
கூட்ட நெரிசலில் கோர்க்கும்
இரு கைகள்
மாற்றிப் போடப்பட்ட சட்டை பொத்தான்
திருத்தமான முகத்தின்
நெற்றித் தழும்பு
அம்மாவிற்கு தெரியாமல்
அட்டைப்பெட்டியில் வளர்க்கும்
எலிக் குஞ்சு
புதுசு என்று பீற்றிக் கொண்டவளின்
பையில் கொட்டிவிட்ட
பேனா மை
இரவில் அவிழ்த்து வைக்கப்படும்
கொலுசுகள்
வருடங்களாய் உடன் வரும்
ஒரு பரம ரகசியம்
உடைத்துவிட்டு ஒளித்து வைத்த
கண்ணாடிக் குருவிகள்
அப்பா சட்டையில் திருடி எடுக்கும்
சில்லறைக் காசுகள்
படிக்கச்செல்வதாய் சென்று பார்த்த
பதின்வயதுப் படங்கள்
நெருப்பில் விரல் நீட்டி
வெளியிழுக்கும் நிமிடங்கள்
பிழைகளின் அச்சில் சுழலும்
அழகியதோர் உலகம்
முன்னால் காதலிகள்
நினைவுகளின் பின் அடுக்கில்
கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருக்கிறார்கள்
ஒரு வாசனையின் இழையில்
மிதக்கிறார்கள்
ஒரு பாடல் வரியில்
புரண்டு கண்சிமிட்டுகிறார்கள்
ஒரு சொல்லின் மீதேறி
வந்து இறங்குகிறார்கள்
ஒரு செயலில்
நிறத்தில்
இடத்தில்
பொருளிலென
ஓயாது
வந்தபடி இருக்கிறார்கள்
சூரியனைப்போல்
பின்னந்தலையில் ஒளிர்ந்திருக்கும் அவர்கள்
நினைவுகளை
கரும் நிழலென
நம்முன்னே நெளிய விடுகிறார்கள்
அவை கணம்தோறும்
நம் கால்களை இடறியபடியே இருக்கின்றன
சிக்னலில் கையேந்துவதில்லை
உடலை வியாபாரமாக்கவில்லை
விஷேச வீடுகளில் விருந்தாளியாய்
போவதில்லை
உழைத்தே பிழைக்கும்
வீராப்பு ராணி
ஆண்கள் கழிப்பறையா
பெண்கள் கழிப்பறையா
இத்தனை பெரிய உலகில்
கொஞ்சம் மறைவிடம் கிடைக்காதா
குந்தி எழுந்தால் ஆச்சு
ஒரு முழம் பூவிற்கு ஒன்னேகாலாய்
தளர்த்தி விற்பவள்
சிநேகமாய் பேசுபவர்க்கும் சேர்த்தே
டீ வாங்குபவள்
அம்மைக்கு மணியார்டரில்
அன்பை அனுப்புபவள்
பக்கத்தில் இருப்போருடன்
பகிர்ந்தே உண்பவள்
புகார்கள் அற்ற புன்னகைக்காரி
எஞ்சிய பூக்களோடு வீடு சேரும் அந்தியில்
வாலாட்டிக் காத்திருக்கும்
தன் தனித்த காமத்திற்கு
எதனை உணவாக இடுவாள்
தன் வீராப்பில் கொஞ்சத்தை
பிய்த்து எடுத்து வீசுவாளா
கரிய வீதிகளில்
உரக்க பேசியலையும்
பைத்திய இரவுகள்
எல்லோருக்கும்
ஒருமுறையேனும்
வாய்த்துவிடுகிறது
****
குளியலறையில் அழுதுஅடங்கும் உள்ளத்தை போலவே இவ்விரவில் பொழியும் கோடை மழை சுடுநிலம் தணிக்கிறது
****
சிணுங்கிப் பொழியும் நடுநிசி மழை
ஒரு ரகசிய முத்தத்தை
ஒத்திருக்கிறது
****