இளம் கைம்பெண்ணின்
பின்னிரவை
ஒத்து இருக்கிறது
தனித்துப்பொழியும்
இவ்விரவு மழை
என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
நான் மலர் என்கிறேன்
நீ இருள் என்கிறாய்நான் கனி என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் புசிக்கத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் சிலை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் வருடத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்
நான் வீணை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் மீட்டத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்
நான் அன்பென்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் முத்தமிடுகிறேன்
நீ புணரத் தொடங்குகிறாய்
நான் இருள் என்கிறேன்
மண்டியிட்டு அமர்ந்து
நிலம் நோக்கித் தலை பணிகிறேன்
மடை உடைந்த வெள்ளமென
ரத்தம் தலை நோக்கிப் பாய்கிறது
என் இரவுகளை
ஓலங்களால் உண்டவர்கள்
கூடாரம்
இந்த மண்டையோடு
இவர்கள் குரல்வளையை
என் உதிரத்தால் நிரப்ப வேண்டும்
மடை உடைந்த பெருவெள்ளம்
திணறும் கானகம்
குய்யோ முய்யோ என்று
எழுந்து பறக்கிறது
கதறலின் முகங்களில்
ரத்தத்தைப் பீய்ச்சியடித்துச் சாய்க்கிறேன்
மெல்ல மெல்ல அடங்குகிறது வனம்
எழுந்து அமர்கிறேன்
குப் குப் என்று ஒரு ரயில்
சத்தமின்றி
நழுவி வெளியேறுகிறது
மௌனத்தின் ஒலி கேட்க
ஆனந்தமாய் தான் இருக்கிறது
என் உள்ளங்கைக்குள் இருப்பது
உனக்கெதிரான ஆயுதம் தான்
என்பதில் அத்தனை உறுதியுடன்
இருக்கிறாய்
நான் சில நேரம் பூக்களை வைத்திருக்கிறேன்
சில நேரம் பனிக்கட்டிகளை
சில நேரம் நறுமணத் தைலத்தை
சில நேரம் பளபளக்கும் ஆயுதத்தை
போர்க்களத்தில் நிற்பவனுக்கு
உறக்கம் வருவதில்லை
நீ விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
நீராடிக்கொண்டிருக்கிறேன்
சோலையில் உலாப்போகிறேன்
எதிரியை களத்தில் இறக்கிவிட்டு
உப்பரிகையில் ஆப்பிள் சீவிக்கொண்டிருப்பது
அலாதி சுகம்
என் உள்ளங்கைக்குள் நிதானித்திருக்கிறது
உனை வீழ்த்தும்
அந்த ஒரு நிமிடம்
நீ
விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான்
ஆப்பிள் தின்று கொண்டிருக்கிறேன்
அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்
அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்
கைகளில் கிள்ளுகிறார்கள்
பெயர் சொல்லி உலுக்குகிறார்கள்
வலி மின்னி வெட்டுகிறது
பின்னிரவுக் கலவிப் பொழுதொன்றை
ஒத்ததாய் இருக்கிறது
அது
பிரிக்க முடியா இமைகளுக்குள்ளே
கருவிழி இறைஞ்சுகிறது
இன்னும் கொஞ்சம் உறங்கட்டுமா
நான் அசையாமல் கிடக்கிறேன்
அவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
கிள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்
உடல் கட்டையாய் கிடக்கையில்
உள்ளம் கையறு நிலையில் தவிக்கிறது
உலகையே இயக்கும் சாவி
உறைந்த இந்தக் கைகளில் தான் இருக்கிறது
எழுந்துவந்தால்...
ஊர்க் கூட்டி நண்பனை அறிமுகப்படுத்துவேன்
துரோகியை அணைத்து முத்தமிடுவேன்
என் காயங்களைத் திறந்து ஆறவிடுவேன்
வடுக்களை உங்களுக்கு வருடத் தருவேன்
மலை கிராமத்திற்குப் பயணம் போவேன்
காது வளர்த்த கிழவியின் கையில் சோறு தின்பேன்
அரட்டை ஒழுக திண்ணையில்
தூங்கிப்போவேன்
ஆடுவேன்
பாடுவேன்
ஓடுவேன்
இன்னும் சத்தமாய் சிரிப்பேன்
அழுவேன்
இன்னும் சத்தமாய்
தலைமுறைகள் தாண்டி
உறைந்து கிடக்கும் உள்ளம்
உடல் கட்டையாய் கிடக்கையில் தான்
கையறு நிலையில் தவிக்கிறது
ஒரே நாளில் உலகம்
பாதியாக மடிக்கப் பட்டுவிட்டது
வலது பக்கம் தூங்கி
வலது பக்கமாய் உண்டு
வலது பக்கமாகவே கழிக்கவேண்டுமாம்
தலையில் குறுக்கிடும் தையல்
கோட்டைத் தாண்டி வராதே என்கிறது
ஒரு பாதி நான் எனில்
மறுபாதி யார்?
என் மறுபாதியின் நினைவுகளை
எங்ஙனம் கைவிட
இடது முலையில் தான்
முதல் அமுதம் பருகினாள்
மகள்
மடி உறங்கும் காதலை
இடக்கையே தலைகோதும்
இடது கால் இன்றும் காட்டும்
முதல் விபத்தின் மிச்சங்களை
நான் ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருக்கிறேன்
என் முதுகுக்குப் பின்னே
இடது உலகம் இரைச்சலுடன் சுற்றுகிறது
ரங்கராட்டினமும்
பொம்மை மிட்டாயும்
கலர் கண்ணாடியும்
காத்தாடியுமாய் மினுக்குகிறது
குறுக்கிட்டு நிற்கும் மின்னல்கோடு
வெட்டி அதிர்கிறது
நான்
வலம் விட்டு
மெல்ல நழுவி
இடப்புறம் நுழைகிறேன்
மீறிச்செல்லும் கால்கள் மட்டுமே
திருவிழாக் காண்கின்றன
எனக்கு பதிலாக பிள்ளைகள்
தொலைபேசி அழைப்புகளுக்கு
பதிலளிக்கிறார்கள்
அம்மாவுக்கு பதிலாக பிள்ளைகள்
உணவூட்டுகிறார்கள்
அப்பனுக்கு பதிலாக பிள்ளைகள்
மடியில் தான் தலை சாய்கிறேன்
கணவனுக்கு பதிலாக பிள்ளைகள்
கரம் பற்றி நடக்கிறேன்
தோழிக்குப் பதிலாக பிள்ளைகளிடம்
ரகசியங்களைப் பகிர்கிறேன்
தோழனுக்கு பதிலாக பிள்ளைகளிடம்
திமிறிச் சண்டையிடுகிறேன்
ஆசானுக்குப் பதிலாக அவர்களே அறிவுரைகள்
வழங்குகிறார்கள்
எல்லாவற்றுக்கும்
பிள்ளைகளே
பதிலாக இருக்கிறார்கள்
பாதி கனவில் விழிப்பு வந்து விடுவது
ஓடும் ரயிலில் இருந்து வெளியே வந்து விழுவது போல
ப்ளாட்பாரத்தில் நாம் மட்டும் அனாதையாய் நிற்கிறோம்
பின் எவ்வளவு முயன்றும் உள்ளே ஏற்க மறுக்கிறார்கள்
ஒரு முறை பாதி திருமணத்தில் வெளியேற்றி கதவடைத்து விட்டார்கள்
திருமணம் முடிந்ததா முறிந்ததா
தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து தூக்குகையில் விழிப்பு வந்துவிட்டது
நல்லதா கெட்டதா
நன்றாக பேசிக்கொண்டிருந்தவன்
பள்ளி பெயரைக் கேட்கையில் உறைந்து நின்று விட்டான்
எத்தனை கெஞ்சியும்
கடை பொம்மை போல விரைத்துக் கொண்டு நிற்கிறான்
மொச்சக்கொட்ட கண்ணழகி
முத்து முத்து பல்லழகி
சீமையில பேரழகி
செஞ்சுவச்ச மாரழகி
நாக்கைக் கடித்துக்கொண்டு
சரியாட்டம் போட்டுவருகையில்
நடுவீதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்களே!!
இப்பொழுது
ஏற்றிக்கட்டிய லுங்கியும் டவுசருமாய்
புழுதிக் கால்களுடன்
நான் எந்தப் பக்கம் செல்ல?!
காலோடு மூத்திரம் போவது கூட தெரியாமல்
அப்படி என்ன தூக்கம்
தவக்களைய கட்டிவிடறேன்
தூக்கம் ஒரு கேலி இவர்களுக்கு
விடுதியே விழித்திருக்கும்
பரீட்சை இரவில்
கால் பரப்பி தூங்கும் இவளுக்காய்
தலையில் அடித்துக் கொள்கிறது இரவு
முதலிரவில் தூங்கிவிட்டவளை
எப்படித் தான் வைத்து வாழ்வது
அப்பன் பிணம் கிடக்க
அடுத்த அறையில் தூங்கியவளை
ஊர் ஏசியிருக்கக் கூடும்
இரவில் விழித்திருந்து காண
என்ன அதிசயம் இருக்கிறது?!
இன்று சாட்சிக்கு யாருமில்லை
உடனிருந்த தூக்கமுமில்லை
நான் விழி விரிய காத்திருக்கிறேன்
உறைந்த சவப்பெட்டியாய் கிடக்கிறது இரவு
ஒலிகள் தூக்கில் தொங்குகின்றன
வரிசையாய்
விடியும்மட்டும் காண
ஒரே காட்சி
இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?!!