Wednesday, February 4, 2015



இன்றைய நாள்
வழக்கமானதொரு நாளாக தொடங்க எத்தனித்து கொஞ்சம் விசித்திரம் காட்டி ஆரம்பித்தது .
எல்லா நாட்களையும் போல இன்றைய நாளும் பரபரப்பாகவே தொடங்கியது .பரபரக்கும் நாளை மெலடிப் பாடல்களுடன் தொடங்குவது என் வழக்கம் .இன்றும் அப்படியே இளையராஜாவின் இன்னிசை சாம்பிராணிப் புகை போல வீடெங்கும் மெல்லியதாய் பரவி
நெகிழ்த்திக் கொண்டிருந்தது .
நேரம் 7 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது .இன்னும் அரை மணியில் பள்ளி வேன் வந்துவிடும் .சாம்பார் பொடி பொட்டலத்தைக் கத்தரிக்க கத்தரிக்கோலை தேடுகிறேன் .வழக்கம் போல கிடைக்கவில்லை .இந்த பிள்ளைகள் இப்படித்தான் எடுத்த பொருளை அதனிடத்தில் வைப்பதில்லை .சரி தேடிக்கொண்டிருக்க நேரம் இல்லை .காய் நறுக்கும் கத்தியை எடுக்கிறேன் .பொட்டலத்தை ஓரத்தில் அறுக்க முயல்கிறேன். அவசரம். சுருக்கென்று ஒரு வலியுடன் விரலை கீறித்திறந்திருக்கிறது கத்தி .
கொஞ்சமும் பதற்றத்தை தந்துவிடாத செந்நிற உதிரம் . விரலை அழுத்திப்பிடித்தபடி திரும்புகிறேன் . சமையல் மேடையில் ஓரத்தில் கத்தரிக்கோல் அமைதியாக சாய்ந்திருக்கிறது .ஒரு நிமிடம் முன்பு என் கண்ணிலிருந்து மறைந்த அது அடுத்த நிமிடத்தில் உருப்பெற்றிருக்கிறது . அப்படி என்றால் நடந்தது ஏற்கனவே முடிவான ஒன்றா ? நடப்பது அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் நம் செயல்கள் அனைத்தும் அதை நோக்கித்தானா ?!
கத்தியை எடுத்துப்பார்த்தேன் . எந்தவித தடயமும் இன்றி மௌனமாக இருந்தது அது . சமரசம் ஏதும் இன்றி தன் கடமை ஒன்றே குறி என்றிருக்கும் அதன் நிலையும் ஜென் நிலை தானா ? மெல்லிதாய் புன்னகைத்தேன் .கத்தியை எடுத்து முத்தமிட்டேன் . சில்லென்ற அதன் உடலில் வெங்காய வாசனை . முத்தம் வெறும் முத்தமாக ஒருபோதும் இருப்பதில்லை . கண் லேசாக கலங்கியது . அப்பா முகம் நொடியில் தோன்றி மறைந்தது .
விரலை அழுத்திப்பிடித்தபடி சமையலை தொடர்கிறேன் . விரல்கள் ஒரு பரத நாட்டிய முத்திரையுடன் இருக்கிறது . சிறு வயதில் நாட்டியம் கற்கும் ஆசை இருந்தது . அதற்கான சூழல் இல்லை . சித்தப்பா மகள் கற்றுத்தந்த ஒரு சில அசைவுகள் மட்டுமே இன்று வரை அறிந்தது . மற்றபடி சினிமா பாடல்களுக்கு ஆடுவதை யார் தடுக்க இயலும் ?! நான் நன்றாக ஆடுவேன் என்பது கடைசி வரை அப்பாவுக்கு தெரியாது . அம்மா என்னை உள்ளும் புறமும் அறிந்தவள் .
அழுத்திப்பிடித்திருந்த விரலை மெல்ல திறந்து பார்த்தேன் . இரத்தம் நின்றிருந்தது .கோபம் கொண்ட காதலனை அல்லது கதறி அழும் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்துகையில் மெல்ல இயல்பு நிலை திரும்புமே அப்படி என் கட்டை விரலின் சமாதானத்தில் ஆள்காட்டி விரல் அமைதிகொண்டு உதிரம் நிறுத்தியிருந்தது .
சஞ்சுவின் குரல் என்னை மீண்டும் கொண்டுவந்து சமையலறையில் இறக்குகிறது . அடுப்பைப் பார்க்கிறேன். சாம்பார் தயாராகிவிட்டிருக்கிறது . சாம்பாரில் சேர்ப்பதற்காக நறுக்கி வைத்த கேரட்டும் ,பீன்சும் அப்படியே தட்டில் இருக்கிறது . கத்தரிக்காய் மட்டும் தன்னந்தனியாக சாம்பாரில் மிதந்தபடி அலுத்துக்கொள்கிறது அப்படி எங்கதான் நினைப்பு போகுமோ உனக்கு!? என்று.மீண்டும் புன்னகை.
ஒரு துண்டு மாமிசத்திற்கு சுற்றி மொய்த்துத் தீர்க்கும் எலிகளென ஒரு நிகழ்வைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் இந்த நினைவுகளை எப்படி விரட்ட ? பேக்பைப்பர்க்காரனைப் போல் இசைத்தபடி அழைத்துச்சென்று பள்ளத்தில் தள்ளி விடலாமா ?!

                                                           ******

Sunday, February 1, 2015



திருவிழாக் கூட்டத்தில்
குழந்தைகளின்
கூச்சலுக்கு இடையே
பஞ்சுமிட்டாய்காரனின் 
மணியோசைக்கு நடுவே
மலர்மணக்கும்
வீதியில்
சிரிப்பொலிக்கும்
வளையல்களின் சிணுங்களுக்கும்
செவிமடுத்தபடி
மௌனித்துக் கிடக்கிறது
அச்சு முறிந்த
அழகியதொரு
ராட்டினம்
***


தொலைக்காட்சியில் 'மண் வாசனை' பட பாடல் பொத்தி வச்ச மல்லிக மொட்டு போய்க்கொண்டிருக்கிறது. வகிடெடுத்து படிய வாரிய தலையும், முழங்கை வரை நீளும் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக பாண்டியன் என் மாமன்களை நினைவு படுத்துகிறார். அப்பாவுடைய தங்கைகள் 3 பேர்க்கும் சேர்த்து மொத்தம் பிள்ளைகள் 7. ஆக 7முறை மாமன்கள். தாய்மாமன்கள் 3.
இரண்டு அத்தைகள் உள்ளூரிலேயே கட்டிக்கொண்டதால் முறை மாமன்கள் அன்றாடம் சந்திக்கக்கூடியவர்களாக இருந்தனர். அண்ணனின் நண்பர்கள் யாரையும் படி ஏற விடாத என் அப்பா மாமன்களுடன் மிகுந்த நட்போடு இருப்பார். சின்ன வயசில் திருவிழாவில் மஞ்சள் நீரை சொம்பில் எடுத்துக்கொண்டு மாமனை தேடி அலைந்ததும், ரவி மாமா, நீரை பிடுங்கி என் மேல் மொத்தமாக கொட்டி விட அழுதுகொண்டே நான் வீட்டுக்கு வந்ததும் இன்றும் மஞ்சள் மணம் மாறாமல் இருக்கிறது. கல்லூரி வரை படித்த ரவி மாமா ரொம்ப சாந்தம், அன்பு நிறைந்தது.
சூரி மாமா சைக்கிள் ரேஸில் எப்போதும் முதலில் வரும். வருடா வருடம் வெற்றி பெற்ற மாமனுக்கு சோடா வாங்கிக்கொண்டு பெருமையோடு நான் ஓடுவதும் தவறாது. மாநிறமும், முட்டை கண்ணும், சரிந்து விழும் அடர்ந்த தலை முடியும், அண்ணாந்து சிரிக்கும் போது தெரியும் வரிசையான பல்லுமாக சூரி மாமாவின் முகம் மிகவும் இணக்கமானது.
சந்திரன் மாமா ஒரு சிடு மூஞ்சி. சும்மா ஏதாவது மிரட்டிக்கொண்டே இருக்கும். சிவப்பாக,உயரமாக அழகாய் இருக்கும் அது முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அபூர்வம். முகத்தை எப்போதும் சீரியசாக, பெரிய மனுஷ தோரணையில் வைத்துக்கொண்டே திரியும்.
ராஜா மாமா எல்லோருக்கும் கடைசி. படபடவென்று பேசும். என் அப்பாவோடு பஞ்சாயத்து வேலைகளுக்கு கூட அலைவது அது தான். ஜடையை ஏன் இப்படி தூக்கி கட்டி இருக்க? நல்லாவே இல்ல, சோறு சாபிடுறியா இல்லையா இவ்ளோ ஒல்லியா இருக்க, சமைக்க எப்போ கத்துக்குவ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும். பேசும்போது சுஜி சுஜி என்று 100 சுஜி சொல்லிவிடும்.
பெரிய அத்தை பிள்ளைகளும், தாய் மாமன்களும் வேறு ஊரில் இருந்தாலும் விடுமுறைகளில் அவர்கள் வீட்டில் கழியும் நாட்கள் மிக இனிமையானவை . பெரிய அத்தை பிள்ளைகளும், அம்மாவின் சகோதரர்களும் வயதில் ரொம்ப பெரியவர்கள். சினிமாவுக்கு கூட்டிப்போவது , தின்பண்டம் வாங்கி வருவது என்று அவர்களின் அன்பில் தந்தைமையை காண முடியும்.
இத்தனை மாமன்களிடையே வளர்ந்த என் வாழ்வு அவ்வளவு பாதுகாப்பானதாக இருந்திருக்கிறது. ஒரு நொடிப்பொழுதும் அவர்கள் எல்லை மீறியதில்லை. உரிமையை தவறாக பயன்படுத்தியத்தில்லை. கண்ணியம் தவறாத அவர்கள் அன்பு இன்று வரை மாறாதிருக்கிறது. உறவுகள் சூழ வாழ்ந்திருத்தல் சுகம். அதுவும் மண் வாசனை மணக்கும் கிராமத்தில்..
[ நான் பாடலை பார்த்து மேற்சொன்ன இவ்வளவும் நினைத்து feel பண்ணிக்கொண்டிருக்கிறேன், சஞ்சு, பாண்டியனைப் பார்த்து யாரும்மா இந்த அங்கிள் லூசு மாதிரி இருக்காங்கன்னு சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை தரை இறக்கிவிட்டாள் ]

Sunday, January 18, 2015

தூமைக் கால
வலி அடரும் இரவில்
கரம்பற்றி
விரல் வருடி
நினைவுகளைக் கிளறி
பட்டாம்பூச்சியென
பறக்கவிடுபவன்
பால்யத்தின் வீதிகளில்
பட்டத்தின் பின்னால்
ஓட விடுபவன்
சைக்கிளோடு
விழுந்துகிடப்பவளின்
முழங்கால் உதிரத்தைக்
காட்டி நகைப்பவன்
மேல்சட்டை இல்லா
கிணற்று நீச்சலில்
நீரள்ளி வீசுபவன்
படுக்கையை நனைத்த
சிறுநீரை பதறி
மறைப்பவன்
ஒற்றை மாம்பிஞ்சை
பிடுங்கிக்கொண்டு ஓடுபவன்
களைத்து ஓய்ந்தவளை
அம்மாவின் முலைக்கு
சப்பத்தருபவன்
அடைப்புக்குறிக்குள்
அடங்காதவன்
அவள் பெருவெளி எங்கும்
நிறைந்து நிற்பவன்

****

Saturday, January 3, 2015

மஞ்சள் புன்னகை



ஒரு சிறு மஞ்சள் புன்னகை
நோய்க்கு மருந்தாகிறது
கண்ணீரைத்துளிர்க்கச் செய்கிறது
அல்லது
மெல்லிய கைக்குட்டையாகிறது
இடுகாட்டு மௌனத்தை
உடைத்தெரியும்
பறவையின் குரலாகிறது
நடுநிசி ஊளைக்கு
நெற்றியில் வருடும்
திருநீராகிறது
விட்டத்தில் திணறும் கயிற்றை
பதறி அறுக்கும்
சிறு அரிவாள் ஆகிறது
ஒரு சிறு மஞ்சள் புன்னகை
ஒத்திப்போடுகிறது
ஒரு தற்கொலையை
அல்லது
ஒரு கொலையை

****

Tuesday, December 30, 2014





எங்கள் ஊரில் ஒரு லைப்ரரி இருந்தது . பற்றாக்குறை வெளிச்சத்துடன் , மர பெஞ்சுகள் போடப்பட்டு , பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த அது, ஒரு புராதன லுக்கில்  இருக்கும்.போஸ்ட் ஆபீஸ் வுடன் இணைந்த கட்டிடம் அது .போஸ்ட் மாஸ்டர் தான் லைப்ரரிக்கும் பொறுப்பு . 
அண்ணனும் மாமாவும் அடிக்கடி அங்கு சென்று வாசித்துக்கொண்டிருப்பார்கள் .நாங்கள் தெருவில் திரிந்துகொண்டிருக்கும் வேளைகளில் லைப்ரரியை கடக்க நேர்கையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்போம். போஸ்ட் மாஸ்டர் 'படிக்க வரீங்களா ?' என்று கேட்டால் இல்லை என்று தலையாட்டிவிட்டு ஓடிவிடுவோம் . டியூஷன் போவது போல, ஒருமுறை நுழைந்து மாட்டிக்கொண்டால் அப்புறம் தப்பமுடியாது என்பது போல அந்த லைப்ரரி அச்சம் தருவதாக இருந்தது .வாசிப்பு என்பது பாடப்புத்தகம் போலவே ஒரு சுமை என்று நாங்கள் நம்பியிருந்தோம். 

ஆறாம் வகுப்பு சென்றபின் அச்சம் குறைந்து ஆர்வம் பிறந்தது. அதுவும் வாசிப்பு ஆர்வம் அல்ல .  அங்கே நுழைவது ஒரு சாகசம் என்பது போல. நானும் தோழன் ,தோழிகளும் கூட்டமாக லைப்ரரிக்குள் நுழைந்தோம் . அந்த புழுக்க வாசனை ,கைவிடப்பட்டது போன்ற அதன் தோற்றம் பதற்றம் தொற்றிக்கொண்டது . அங்கிருந்த நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பின் புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்றார் போஸ்ட் மாஸ்டர். நோட்டின் அருகே ஒரு நீளமான  பென்சில் அரைஞான் கயிறு போன்ற ஒரு கயிற்றில் பிணைத்து கட்டப்பட்டு இருந்தது. அவரவர் பெயர்களை வரிசையாக எழுதினோம் . ஒரே நாளில் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டதன் அறிகுறி அனைவர் முகங்களிலும். கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வரிசையாக பெஞ்சுகளில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினோம்.

அவ்வளவு தான் சாகச த்ரில் எல்லாம் அத்தோடு வடிந்துவிட்டது. இப்போது, இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது என்ற கவலை பற்றிக்கொண்டது. ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறோம் ஜனங்கள் நடந்துகொண்டும் ,சைக்கிளிலும் தெருவில் சுதந்திரமாக இருக்கின்றனர் .நாங்கள் நன்றாக மாட்டிக்கொண்டோம் . உடனே வெளியே போனால் போஸ்ட் மாஸ்டர் திட்டுவாரோ ? இங்கே வந்திருக்கவே கூடாது .எல்லோரும் பலியாடுபோல புத்தகங்களோடு அமர்ந்திருந்தோம் . போஸ்ட் மாஸ்டர் உள்ளறைக்குள் போனார் . முதல் ஆள் புத்தகத்தை வைத்துவிட்டு ஓட்டம் எடுத்ததும் நாங்கள் அனைவரும் பின்தொடர்ந்து தெறித்து ஓடினோம். காற்று எவ்வளவு சில்லென்று முகத்தில் மோதுகிறது ! அநேகமாக காற்றும் எங்களுடன் கூட ஓடிவந்திருக்கும் என்று நினைக்கிறேன் .அதன் பிறகு எங்கள் கையெழுத்து அங்கு பதிவாகவே இல்லை .

என் வாழ்வில் வெகு தாமதமாகவே லைப்ரரிக்குள்  மீண்டும் நுழைந்தேன் .அதுவும் தோழி வீட்டில் இருந்த சிறிய லைப்ரரி. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்துக் கடந்துகொண்டிருந்த நாட்கள் கொஞ்சம் வேகமெடுத்தது அங்குதான். 

என் பிள்ளைகள் சீக்கிரமே வாசிக்கத்தொடங்கி விட்டனர். இப்பெருநகரில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏராளம் கொட்டிக்கிடக்கின்றன. பள்ளிகளும் லைப்ரரிக்கென்று ஒரு பீரியட் ஒதுக்கி வாசிப்பைப் பழக்குகின்றனர் . ஆனாலும் எங்கள் ஏரியாவில் நான் லைப்ரரியை கண்டதில்லை .மூன்று நாட்களுக்கு முன் சஞ்சு ஒரு லைப்ரரியை கண்டுகொண்டாள். தினம் கடக்கும் சாலையில் மாடியில் சிறிய அறையில் இருந்த பிரைவேட் லெண்டிங்  லைப்ரரியை நான் கவனித்திருக்கவே இல்லை . மூன்று நாளாக இதே நினைப்பாக கிடந்து இன்று மெம்பராக இணைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து படிக்க வசதி இல்லை என்பதொன்றே குறை அவளுக்கு . 

தெருவுக்கு தெரு பீட்சா ,பர்கர் , பானிபூரி கடைகளும் பப்களும் நிறைந்த இந்த நகரில், ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லக்கூடிய படிக்கட்டுகளுடன் சிறிய அறையில் பொக்கிஷம் போல இலக்கியங்கள் காத்திருக்கின்றன . லைப்ரரி  நடத்துபவரிடமும் இதைச்சொன்னேன். மனதாரப் பாராட்டினேன். முகம் மலர்ந்த அவர் புன்னகையில் ஒளி கசிந்தது .

                                                    ********************


ஒரு தீக்குச்சியை உரசி
நகர்ந்து கொண்டிருக்கும்
புழுவின் உடலில் தடவுதல்
ஒரு குண்டூசியின் முனையை
நத்தையின் பாதங்களில் செலுத்துதல்
ஒரு பிளேடைக் கொண்டு
எறும்பின் புட்டத்தை அகற்றுதல்
இரண்டே விரல் கொண்டு
பட்டாம்பூச்சியின் சிறகைப் பறித்தல்
ஒற்றைச் சொல் கொண்டு
மூச்சுக்குழலை முடிச்சிடுதல்

****

Wednesday, September 24, 2014

பூனைக்குட்டி





அப்போது நான் பள்ளிச்சிறுமி . தட்டானைப்போல தெருவெங்கும் சுத்திக்கொண்டிருப்பவள். முகமறியா மனிதர்கள் என்று யாரும் அங்கிருப்பதில்லை. அத்தனையும் தெரிந்தமுகங்கள். அனைவரும் என் அப்பனை, பாட்டனை, பூட்டனை தெரிந்தவர்கள். தலைமுறைகள் தாண்டி அந்த கிராமமெனும் தோணியில் ஒன்றாகப் பயணிப்பவர்கள்.
அங்கு குழந்தைகள் அச்சமற்று இருந்தோம். பெற்றோர்கள் பிள்ளைகளை ஊர் எல்லைவரை அனுமதித்திருந்தனர் .

அண்ணன், வீட்டில் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்க, நான் விளக்கு வைக்கும் வரை ஊர்சுற்றிவிட்டு முழங்கால் வரை தெருப்புளுதியை வாரிக்கொண்டு வீடுவந்து சேருவேன். அம்மா வாய்நிறைய வசையுடன் அடிக்கவருகையில் ஒரே ஓட்டமாக படிகளில் தாண்டிக்குதித்து அருகில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு ஓடிவிடுவேன். அப்பா வீட்டுக்கு வந்ததும் ஆள் அனுப்பி அழைத்துவருவார்கள். அப்பா முன்னால் என்னை யாரும் தொட்டுவிட முடியாது . அதனால் அம்மா கொஞ்சநேரம் குற்றப்பத்திரிக்கை வாசித்துவிட்டு சரி சாப்பிட வா என்பாள்.

அன்றும் நான் என் பட்டாளத்துடன் விளையாடப்போனேன். ஒருத்தி சொன்னாள் உடைந்து கிட்டத்தட்ட குட்டிச்சுவராக நிற்கும் அந்த வீட்டின் கூரை இடுக்கில் பூனை குட்டிபோட்டிருக்கிறது என்று. எங்கள் எல்லோருக்கும் ஆசை அதை பார்க்கவேண்டும் என்று. பூனைக் கடித்துவிடுமோ என்று பயம்வேறு. கொஞ்சம் தள்ளி இருந்த சுவர்மேல் ஏறி ஒவ்வொருவராக பார்க்கமுடிவு செய்தோம். மூணுகுட்டி இருக்கு, குட்டி தூங்குது, வெள்ளையா இருக்கு, பூனை பாக்குது சத்தம்போடாத என்று ஒவ்வொருவராக ஏறிப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்க ,என் முறைக்காக நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது என்முறை. ஆவலும், பயமும் மிக அந்த செந்நிற மண்சுவற்றைப்பற்றி மெல்ல ஏறினேன். பூனைக்குட்டிகள் முண்டிக்கொண்டிருந்தன. தாய் வெறுமனே என்னைப்பார்த்துக்கொண்டிருந்தது. சிலநிமிடங்கள் தான், தொம் என்ற சத்தத்துடன் நான் கீழ்நோக்கி சரிந்துகொண்டிருந்தேன். மண்சுவர் உடைந்து ,கட்டி மண் குவியலும் நானுமாக மொத்தமாகக்குவிந்திருந்தோம்.

நான் கை, கால் எல்லாம் சிராய்ப்பில் ரத்தம் ஒழுக நொண்டிக்கொண்டே அங்கிருந்து எல்லோருடனும் வெளியேறினேன். எதிரே என் அத்தை வீடு அப்போது தான் அஸ்திவாரம் எழுப்பப்பட்ட நிலையில் இருந்தது அங்கு போய் மறைவாக உட்கார்ந்துகொண்டு என் காயங்களை எல்லாம் கவலையோடு ஆராய்ந்தோம். எனக்கு வலியைக் காட்டிலும் அம்மாவுக்கு தெரிந்தால் அடி விழுமே என்ற கவலைதான் அதிகம் இருந்தது. அம்மாவிடம் சொல்லாமல் மறைப்பது என்று ஒருமனதாக முடிவானது. வலி முகத்தில் தெரிகிறது , நடையில் தெரிகிறது. அத்தனையும் வீட்டுவாசலில் நுழைகையில் மறைத்திருந்தேன்.

வீட்டில் பாத் ரூமுக்குப் போய் கைகால்களில் காயத்தில் ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் கழுவிவிட்டு நேராகச்சென்று படுத்துவிட்டேன். அம்மா சாப்பிடக்கூப்பிட்டாள். அத்தை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொல்லி கண்களை மூடிக்கொண்டேன்.

எத்தனை யோசித்தும் அந்த காயம் எப்போது ஆறியது, மறுநாள் என்னசெய்தேன் என்று ஞாபகமே வரவில்லை. இத்தனை வருடம் கழித்து இப்போது தான் கொஞ்சநாளுக்கு முன் அம்மாவிடம் இதை சொன்னேன்.

மறைக்கப்படும் காயங்களுக்கு மருந்து இடப்படுவதில்லை. மௌனமே காயங்களை விசிறிக்கொண்டிருக்கின்றது. சில காயங்கள் எப்போது ஆறியதென்றறியாமல் மறைந்துபோகின்றன. சில காயங்கள் புரையோடி உயிரைத் தின்கின்றன. எப்படியாகினும் மறைக்கப்படும் காயங்கள் என்றும் மறப்பதற்கில்லை.

Thursday, July 17, 2014



இரக்கமின்றி பொழிகிறது
இந்த மழை

முரட்டுக்கோபக்காரனைப்போல
சீறிக்கொண்டுவரும்
வெயிலை
நெஞ்சோடு அணைத்துக்கொள்வதில்
யாதொரு அச்சமும் இல்லை

காதோரம் கிசுகிசுத்து
கள்ளப்புன்னகையில் கிறங்கச்செய்து
உயிரைத்தின்று உருக்குலைக்கும்
மழையை
அஞ்சி ஒடுங்குகிறேன்

உன் ஈரத்தைப்
பொறுக்கிக்கொண்டு
வெளியேறு

வாள் ஏந்தி வருவான்
ஓர் தணல்வீரன்

எரிந்து தழைக்கட்டும்
என் உப்பு மேனி
 

****

Tuesday, July 15, 2014



ஆதிவாசியின் சமிஞ்சையென 
என் குரல்
வனமெங்கும் ஒலிக்கிறது
வெகு தொலைவிலிருந்து 
திரும்பும் பதில் குரல்
கொஞ்சம் 
ஆசுவசிக்கச்செய்கிறது.

****