Wednesday, April 3, 2013

தேன் - மொழி





நீண்ட நாளாக எனக்கு அந்த ஆசை இருந்தது.கடைக்குச் செல்லும்போதெல்லாம் என் பார்வை ஆசையாய் அதன் மேல் சென்று அமர்ந்து , பின் பெருமூச்சுடன் திரும்பும். இந்த வயசு, கண்ணுக்குத் தெரியாத ஓர்சாட்டையை நம் மீது சொடுக்கியபடியே இருக்கிறது. இந்த வயசில் ஆடாதே, இந்த வயசில் பாடாதே, சத்தமாகச் சிரிக்காதே, வேகமாக ஓடாதே ..ஷ்...அப்பா ..எத்தனை விதிகளைத் தான் சுமப்பதோ? ஆசைக்கு வயசு உண்டா என்ன? 

நான் இன்றும் கடைக்குப் போனேன். கடைக்காரரைத் தவிரக் கடையில் வேறு யாரும் இல்லை. உச்சி வெயில் நேரம். கார்டன் சிட்டி என்ற பேர் எல்லாம் காலாவதி ஆகி, பெங்களூர் பொங்கல் பானையாகப் புழுங்கத் தொடங்கி வெகுகாலம் ஆகிறது. இன்று துணிந்து விட்டேன். கடைக்காரர் என்ன நினைத்தாலும் சரி இன்று அதை வாங்கி விடுவதென்று. 

நகரவாசிகள் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு கிராமத்து மனிதரும் தன் பால்யத்தை, அந்த தின்பண்டத்தின்  சுவையில் கொஞ்சமேனும்  அமிழ்த்தி எடுத்து வந்திருப்பார்."தேன் மிட்டாய்".

நான் என் சிறுவயதில் தேன் மிட்டாய்க்கு அடிமை. தினம் தவறாமல் வாங்கி சாப்பிடுவேன். இப்போதெல்லாம் பிள்ளைகள் 'அம்மா டீ பிரேக்ல கேண்டீன் போகணும் பணம் கொடுங்க 'என்று வெகுஇயல்பாகக் கேட்டு வாங்கிப் போகிறார்கள். தினமும் பாக்கெட் மணி வேண்டும் கட்டளைப் போடும் பிள்ளைகளும் உண்டு. நானோ, என் தோழிகளோ வீட்டிலிருந்து ஒரு ரூபாய் பெற்று வருவதைப் பெரும் சாதனையாக எண்ணி இருக்கிறோம்.ஊரிலிருந்து உறவினர் யாரேனும் வந்துவிட்டுச் செல்லும்போது 5,10 என்று நோட்டை தந்துவிட்டு போகும் அதிர்ஷ்டம் எப்போதாவது வாய்ப்பதுண்டு. ரூபாய் நோட்டு கையில் இருக்கும் நாளில் பெரும் ராஜகுமாரியின் தோரணையோடு தோழிகள் புடை சூழ கடைக்குச் சென்று தேன் மிட்டாய்களை  வாங்கி எல்லோர்க்கும் இலவசமாக வழங்கி கெத்து காட்டுவதுண்டு. நீங்கள் என் உற்ற நண்பர் என்று நம்பி ஓர் உண்மையையும் இங்கு சொல்கிறேன். அப்பா காசு கொடுக்காமல் திடீர் கஞ்சனாக மாறும் நாட்களில் நானும் உடனடி அவதாரம் ஒன்றை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆம்..அலமாரியில் அப்பா கழற்றித் தொங்கவிடும் அந்த வெள்ளை சட்டையின் பெரிய பாக்கெட்டுக்குள் கையை விடவேண்டி வரும். சில்லறைக் காசுகள் வரை துணியும் கை ரூபாய்க்கு பின்வாங்கும். 

இன்று பணம் கையில் இருக்கிறது. வயது கைநழுவிச்சென்று கெக்கலிக்கிறது. வாங்க வேண்டிய மற்ற சாமான்களை எல்லாம் வாங்கிவிட்டு, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களில் ஒன்றில் இருந்த அந்த சிவந்த தேன் மிட்டாயில் ஒன்றை எடுத்துகொண்டே இது நல்லா இருக்குமாங்க? என்று கேட்டே விட்டேன். கடைக்காரர் சிரித்தபடி தலைமட்டும் ஆட்டிவைத்தார். பொதுவாக வளவளப்பான காகிதத்தில் சுற்றப்படாத, இப்படி திறந்த நிலையில் இருக்கும் மிட்டாய்கள் தரக்குறைவானதாகப் பார்க்கப்படுகிறது. அவற்றை யாரும் வாங்குவதே இல்லை. ஆனால் எல்லாத் தெருமுனை கடைகளிலும் அவை இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை விரும்பி  வாங்கவும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள். 

ஒரு மிட்டாயை எடுத்து அங்கேயே கடிக்கத்தொடங்கினேன். அத்தனை அவசரம்.. சும்மாவா ?!  எத்தனை வருட ஆசை!!  என் பள்ளி வயதில் தேன் மிட்டாய் சின்னது 25 பைசா, பெரியது 50 பைசா. சின்ன மிட்டாயில் கடித்தால் உள்ளே தேன் இருக்காது. [தேன் என்றதும் தேனேவா? என்று கேட்காதீர்கள். சர்க்கரை பாகுதான்].ஆனால் அப்போதெல்லாம் அது தேன் என்று தான் நினைத்திருந்தேன். அறியாமை தான் எத்தனை சுகமானது?!! பெரிய மிட்டாயில் கடித்தால் தேன் சொட்டும். கொஞ்சம் கவனம் குறைந்தால் தேன் வாயிலிருந்து நழுவி விரலில் சொட்டும். மிட்டாயும் பஞ்சு போல அவ்வளவு மிருதுவாக இருக்கும். இன்று தேன் மிட்டாயின் விலை ஒரு ரூபாயாக உயர்ந்திருக்கிறது. விலைவாசியின் ஜெட் வேக உயர்வை கணக்கில் கொள்ளும்போது இந்த மிட்டாயின் விலை ஏற்றம் ரொம்பவும் மந்தம் தான். நான் எனது இத்தனை வருட ஆசையை, தவத்தை அடையும் விதமாக என் அனைத்து விதிகளையும் , சுமைகளையும், அரிதாரங்களையும் கழற்றி எறிந்துவிட்டு அந்த தேன் மிட்டாயை கடித்துச்சுவைத்தேன். கொஞ்சமும் மிருதுத்தன்மை அற்று, காய்ந்து போய், கடினமாக, லேசாய் புளிப்பு சுவையை என் நாவில் பரவவிட்டபடி  என் மனதிற்கினியத் தேன் மிட்டாய் இத்தனை கால ஆசையை அடியோடு வெட்டிச் சாய்த்தபடி என் தொண்டைக்குழியில்  இறங்கியது. இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாத என் பால்யகாலத்தைப்போலவே 
தேன் சொட்டும் அந்த மிட்டாயின் சுவையை இனி நான் அறியவே முடியாது என்று அது சொல்லாமல் சொல்லியது. என் வாழ்நாளின் கடைசித் தேன் மிட்டாய்க்கான ஒரு ரூபாயை கடைக்காரரிடம் தந்துவிட்டுத் திரும்பத்தொடங்கினேன்..  

                                                  *****************

11 comments:

  1. அறியாமை தான் எத்தனை சுகமானது?!

    ஆமாம்!

    அருமையான பகிர்வு :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஈரோடு கதிர்..

      Delete
  2. அருமை:)!

    /என் பால்யகாலத்தைப்போலவே
    தேன் சொட்டும் அந்த மிட்டாயின் சுவையை இனி நான் அறியவே முடியாது/

    அழகாய் சொன்னீர்கள்! நானும் இப்படிதான் உருகி இருந்தேன்
    சமீபத்தில் பத்து பைசா (குச்சி ஐஸ்) பால் ஐசுக்காக:)!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி. குச்சி ஐஸ் சுவைத்தீர்களா இல்லையா?

      Delete
  3. நான் இது போன்ற விளையாட்டுகளில் இறங்குவதே இல்லை. இவ்வுலகில் எதற்கும் எதோவொரு காரணம் இருக்கும். இருக்கிறது. பால்ய வயதில் ஓடி விளையாடிய வீடுகளுக்குப் போவதில்லை. ஆசை ஆசையாய்ச் சேர்த்து வைத்து மிடுக்கு கொண்ட வண்ண வண்ண பேருந்து நுழைவுச்சீட்டுகளை மனத்திற்கொண்டு இன்றைய சீட்டுகளை வாங்கி கண்ணுறுவதும் இல்லை. இப்படி நிறைய. ஏன்? அவை கொன்றுவிடும் என் இனிய நினைவுகளை!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மை தான் .நினைவுகளை கொன்றுவிடுமா என்று தெரியவில்லை,ஆனால் நினைவுகள் நிச்சயம் காயப்படும்.நன்றி.

      Delete
  4. அருமை..அந்த சுவைகளை மீட்டு எடுக்க முடிவதில்லை.

    ReplyDelete
  5. இனிமையான நினைவுகள் தோழி.......... என்னை என் பால்யப்பருவத்திற்கே அழைத்துச்சென்று , தேன்மிட்டாயை ருசிக்கச் செய்துவிட்டது இந்தப்பதிவு

    ReplyDelete
  6. எனக்கு வேறெந்த குச்சி ஐஸும் வேண்டாம். பால் ஐஸ்தான் வேண்டும்:)! அது எங்கே கிடைக்கப் போகிறது? உங்க தேன் மிட்டாய் அனுபவம் படித்த பிறகு நாவில் நிற்கும் பழைய சுவையே போதுமென்று தோன்றி விட்டது.

    ReplyDelete